மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

சுதாரித்த ரோஹித் : பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா!

சுதாரித்த ரோஹித் : பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா!

இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரை தீர்மானிக்கும் முக்கியமான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 13) போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா களமிறங்கினர். ஷிகர் தவன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார். மறுமுனையில் ரோஹித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மோர்கல் வீசிய 7வது ஓவரின் முதல், இரண்டாவது மற்றும் நான்காவது பந்தினை தொடர்ச்சியாக பவுண்டரி அடித்து அசத்திய தவன், ரபடாவின் 8வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரி அடித்து, இரண்டாவது பந்தில் டீப் ஸ்குயர் திசையில் ஆண்டில் ஃபெலுக்வாயோவிடம் கேட்ச் ஆனார். பின்னர் ரோஹித்துடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த ரோஹித் இந்த போட்டியில் சுதாரித்து சிறப்பாக ஆடி வருகிறார். 26 வது ஓவரில் ரோஹித் அடித்த பந்து நேராக டுமினியின் கைகளுக்கு சென்றது. ஆனால் அதற்குள் கோலி அவசரப்பட்டு ரன் எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார். கோலி 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அஜின்க்யா ரஹானே 32வது ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

நன்றாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் ரன்ரேட்டை இந்த இருவரது ரன்அவுட் மாற்றி விட்டது. சற்று முன் வரை இந்தியா 33 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. ரோஹித் 79 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon