மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

அமைச்சர்கள் போடும் முட்டுக்கட்டை!

அமைச்சர்கள் போடும் முட்டுக்கட்டை!

குமரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் வர்த்தக துறைமுகம் அமைந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் இன்று (பிப்ரவரி 13) நாகர் கோவிலில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "நாம் சாலை வழியாகவே பயணம் மேற்கொள்கிறோம். அதைவிடுத்து கப்பல் மற்றும் விமானம் வழியாகப் பயணம் செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்காக 200 கோடி ரூபாய் நிதி தருவதற்கும் தயாராக இருந்தது. 'ஆனால் தயவு செய்து அந்தத் திட்டத்தை கொண்டு வந்து விடாதீர்கள்' என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். என்னவென்று கேட்டால், 'மீன் பிடிப்பதற்கான வலைகளை அங்குதான் மீனவர்கள் போட்டு வைத்திருப்பர். அவ்வழியாக கப்பல் சென்றால் அனைத்து வலைகளும் அறுந்து போகும்' என்கிறார் அமைச்சர்" என்று பேசினார்.

மேலும் "குமரி மாவட்டத்தில் ஒரு இடத்தில் விமான நிலையம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கும்போது. ஒரு அமைச்சர், அங்கு மட்டும் விமான நிலையம் அமைக்க வேண்டாம். அங்கு கொக்கு வந்து முட்டையிடும் என்று கூறுகிறார். இது நடந்த சம்பவம்.இப்படி ஒவ்வொரு திட்டத்துக்கும் அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்" என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதில் கூறும் விதமாகப் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "ஒரு திட்டம் அமைய இருக்கும் போதும் திட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்கள் அச்சப்படுகிறார்கள். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மாற்றுக்கருத்து தெரிவிக்கிற மக்களிடத்தில் அதனால் ஏற்படக்கூடிய நன்மை குறித்த புரிதலை ஏற்படுத்தித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர இதில் யாரையும் குறை கூறுவது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon