மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

குன்றத்தூர் செயின் பறிப்பு: இளைஞர் கைது!

குன்றத்தூர் செயின் பறிப்பு: இளைஞர் கைது!

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரைப் போலீசார் புதுச்சேரியில் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் - ஜெயஸ்ரீ (57) தம்பதியினர் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஜெயஸ்ரீயின் செயினைப் பறித்துக்கொண்டு அங்கு தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறித் தப்பிவிட்டார். ஜெயஸ்ரீயின் கணவர் மற்றும் அருகில் இருந்தோர் துரத்தியும் மர்ம நபரைப் பிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தின்போது நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகிய காட்சிகளை வைத்துக் குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். ஜெயஸ்ரீயின் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச்சென்றது சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா, சாலமன் ஆகியோர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அவர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் புதுச்சேரியில் பதுங்கியிருந்த சிவாவைக் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள சாலமனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதுபோன்று ஆரணியில் தனியாக நடந்துசென்ற பெண்ணிடம் செயினைப் பறித்துச்சென்ற மேல்மலையனூர் கார்த்திக், கொளத்தூர் தினேஷ் ஆகியோரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்

ஆனால் அரும்பாக்கத்தில் மேனகா என்ற பெண்ணைத் தரதரவென இழுத்துச்சென்று 15 சவரன் நகையைப் பறித்துச்சென்ற மர்ம நபர்கள் இருவர் இன்னும் பிடிபடவில்லை. அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon