மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

ஆதார் இல்லை என்ற காரணத்திற்காக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை தடுக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

டெல்லியில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நல்ல நிர்வாகத்துக்கும் அரசுக்குப் பணம் மிச்சப்படுத்துவதற்கும் ஆதார் பெரிய திட்டமாகும். அதே நேரத்தில் ஆதாருக்கு என சட்டம் உள்ளது. அச்சட்டத்தின்படி, ஆதார் கட்டாயம் எனக் கூறி, அரசின் நலத்திட்டப் பலன்கள் மக்களுக்குச் செல்வதை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது.

ஆதார் இல்லாத நபரிடம், ஆதார் பெற வேண்டும் எனக் கூறிவிட்டு, வேறொரு சான்று மூலம் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் ஆதார் காரணம் கூறி பொருட்கள் மறுக்கப்படுகிறது. இது நடக்கக் கூடாது. ஏழைகளுக்கு ரேஷன் பொருள் கிடைப்பதை யாரும் தடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக வாகன லைசென்ஸுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, “ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்தச் சலுகையையும் மறுக்கக் கூடாது, சமூக நலத் திட்டங்களின் சலுகைகளைப் பெற, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆதார் இல்லையெனில், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு அடையாள அட்டைகள் மூலம், அவர்களுக்கு சமூக நலத் திட்டங்களின் சலுகைகளை வழங்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon