மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஜெ.வைக் குற்றவாளி எனக் கூற யார் காரணம்?

ஜெ.வைக் குற்றவாளி எனக் கூற யார் காரணம்?

‘ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று கூறுவதற்கு தினகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் காரணம்’ என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திமுக, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருடைய படத்தை சட்டமன்றத்தில் எப்படித் திறந்து வைக்கலாம் என்றும் அவர்கள் கேள்வியை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, “ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அவரைக் குற்றவாளி என்று கூறினார்கள். ஆனால், தற்போது மறைந்த பிறகும் அவரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது நாகரிகம் அல்ல. ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவதற்குக் காரணம் யார் என்றால் தினகரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால், ஜெயலலிதா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று கூறி தவ வாழ்க்கை வாழ்ந்தவர்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெண்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக மக்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் எதையுமே பாராட்டியதில்லை. அவர்கள் இதைப் பாராட்டுவார்கள் என்றும் நாங்கள் எண்ணவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon