மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஜீயர் மீதான புகார்: காவல்துறைக்கு உத்தரவு!

ஜீயர் மீதான புகார்: காவல்துறைக்கு உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அதை கைவிட்டார். இந்த மாதம் மீண்டும் உண்ணாவிரதம் இருந்த ஜீயர் மீண்டும் அதைக் கைவிட்டார். இதற்கிடையில், கடந்த ஜனவரி 26 அன்று வைரமுத்துவைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ‘உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளைப் பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும். இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கு கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். எதற்கும் துணிவோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் அளித்திருந்தார். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், போலீசார் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து இன்று (பிப்ரவரி13) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜீயருக்கு எதிரான மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணையில் ஜீயர் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரிய மனு குறித்து வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று திருச்செங்கோடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon