மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மணல் வழங்குவதில் பாரபட்சம்!

மணல் வழங்குவதில் பாரபட்சம்!

காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள அரசு மணல்குவாரியில், மணல் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி இன்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆழங்காத்தான் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்படுகிறது. இங்குள்ள மணல் குவாரிகளிலிருந்து லாரி மூலம் மணல் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அதேபோல சி.அரசூர் பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியிலும் மணல் எடுக்கப்படுகிறது. இந்த மணல் குவாரிகளில் வெளியூர் லாரிகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், உள்ளூர்வாசிகளுக்கு மணல் தர மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மணல் குவாரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனின் உறவினர் கட்டுப்பாட்டில் இருப்பதால், தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மட்டும் டிராக்டர்களில் மணல் வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மணல் குவாரியிலிருந்து மணல் அள்ளிவந்த டிராக்டர்களை மறித்து எள்ளேரி, லால்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை நீக்க விரைவில் 60 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon