மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

அனைத்து துறைகளிலும் ஊழல்: தினகரன்

அனைத்து துறைகளிலும் ஊழல்: தினகரன்

தமிழகத்தில் கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்று ஆர்கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி உள்ளிட்டோர் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டத்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இன்று (பிப்ரவரி 13) தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "இந்த அரசாங்கம் வெளிப்படை தன்மையற்றதாக இருக்கிறது.மக்கள் விரோத அரசாக இருப்பதால் தான் இதனை எதிர்த்து மக்கள் சார்பாக நான் போராடுகிறேன். தமிழகத்தில் கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடு நடைபெறுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, "இந்த ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் அது விரைவில் நிறைவேறும். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறையில் 30 முதல் 40 சதவீதம் வரை லஞ்சம் பெறுவதாக கூறப்படுகிறது.அதனால் தான் அனைத்து திட்டங்களும் தரமற்று இருக்கின்றது" என்றும் தினகரன் கூறினார்.

தமிழகத்தில் காவி ஆட்சியமைப்போம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியது பற்றிய கேள்விக்கு, 'பொங்கல் சமயத்தில் வீடுகளுக்கு வெள்ளை மற்றும் காவி அடிப்பார்கள் அதைப் பற்றி அவர் கூறியிருப்பார்' என்றும் முதல்வரை ஸ்டாலின் சந்தித்தது பற்றிய கேள்விக்கு, 'ஸ்டாலின் செய்வது அரசியல் ஸ்டன்ட், எதை செய்தாவது ஆட்சியை பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார்' என்றும் தினகரன் விமர்சனம் செய்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon