மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஸ்டெர்லைட் போராட்டம் :250 பேர் கைது!

ஸ்டெர்லைட் போராட்டம் :250 பேர் கைது!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள், மூச்சுத் திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று இரண்டாவது நாளாக எம்.ஜி.ஆர்.பூங்கா முன்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துணை ஆட்சியரும், போலீசாரும் மக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையில் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கோ‌ஷங்களை எழுப்பினர்.

முக்கியச் சாலையில் போராட்டம் நடத்தியதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி காவல் துறை உதவி கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்தும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேரை கைதுசெய்த போலீசார் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் குமரெட்டியாபுர கிராமம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon