மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஜெயலலிதா சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்!

ஜெயலலிதா சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, இன்று (பிப்ரவரி 13) நேரில் சந்தித்து, அரசு போக்குவரத்துக்கழக சீர்திருத்தம் தொடர்பான திமுகவின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார் திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், இப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார் என்று தெரிவித்தார்.

அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணக்கட்டணத்தை உயர்த்தி, ஜனவரி 19ஆம் தேதியன்று உத்தரவிட்டது தமிழக அரசு. இதனை எதிர்த்து, தமிழகமெங்கும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகச் சீரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள திமுக சார்பில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் இந்தக்குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் இரண்டு வார காலம் ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையை, கடந்த 11ஆம் தேதியன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

இந்த ஆய்வறிக்கையை, இன்று தலைமைச்செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தார் மு.க.ஸ்டாலின். இந்த ஆய்வறிக்கையில் 27 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சரைச் சந்தித்தபின்பு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின். அப்போது, இந்த அறிக்கையின்படி செயல்பட்டால் மக்கள் தலையில் பேருந்து கட்டணத்தைச் சுமத்தவேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

”போக்குவரத்துக்கழகத்தை சேவையாகக் கருதி, அதன் நஷ்டத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மத்திய தொகுப்பு நிதியம், தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒருங்கிணைப்பு ஆணையம் ஆகியவற்றை உருவாக்கி, போக்குவரத்துக்கழகங்களைச் சீரமைத்து விடவேண்டும்.

டீசல், பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள மதிப்பு கூட்டு வரிகள், கலால் வரிகள் அதிகமாக உள்ளன. இதனை ரத்து செய்துவிட்டு, ஒரேவிதமான 10 சதவீத ஜிஎஸ்டி வரியை விதித்திட வேண்டும். பயணிகள், நடத்துனர்கள், ஓட்டுனர்கள் இடையே மாதம்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பேருந்துகளைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

இதுபோன்று 27 பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். துணை முதலமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் உடனிருந்தனர். அவர்களிடமும் இந்த ஆய்வறிக்கையை அளித்திருக்கிறோம். அதனை வாங்கி வைத்துக்கொண்ட தமிழக முதலமைச்சர், எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழக அரசு நிர்வாகம் செயல்பட முடியாமல் இருப்பதனாலேயே, எதிர்கட்சியான திமுக போக்குவரத்துக்கழக சீர்திருத்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார் ஸ்டாலின். இவற்றை அமல்படுத்தினால் மகிழ்ச்சியடைவோம் என்றும், இதனை அலட்சியப்படுத்தினால் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன நடவடிக்கை எடுப்பதென முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது பற்றி கருத்து தெரிவித்த ஸ்டாலின், எந்த அடிப்படையில் இந்த படத்தைத் திறந்து வைத்திருப்பதாகக் கேள்வி எழுப்பினார். ”குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் இந்த படத்திறப்பு விழாவுக்கு வர மறுத்திருக்கின்றனர். அதற்கான காரணத்தை ஜெயக்குமார் விளக்க வேண்டும். ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்று, அவர்கள் வர மறுத்தனர் என்பதே இதற்குக் காரணம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரை நான் கொச்சைப்படுத்துவதாக நினைத்திடக்கூடாது. ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால், சசிகலாவுடன் முதல் குற்றவாளியாக பெங்களூரு சிறையில் இருந்திருப்பார். அவருடைய படத்தை கட்சி அலுவலகங்களிலோ, சொந்த இடங்களிலோ வைத்துக்கொள்ளலாம். சட்டமன்றத்தில் வைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என்றார் ஸ்டாலின்.

மேலும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இடம்பெறக்கூடாது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon