மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ரவுடி பினு போலீசில் சரண்!

ரவுடி பினு போலீசில் சரண்!

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரவுடி பினு இன்று (பிப்ரவரி 13) காவல் துறையில் சரணடைந்துள்ளார்.

சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவரான பினு கடந்த 6ஆம் தேதி தனது பிறந்த நாளை 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து பூந்தமல்லி அருகே கொண்டாடினார். மது விருந்துடன் கூடிய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பினு கேக்கை வீச்சரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்றிருந்த பினு மீண்டும் தான் சென்னை வந்ததைத் தெரியப்படுத்த இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது சினிமா பாணியில் ரவுடிகளைச் சுற்றிவளைத்த போலீசார் சுமார் 75 பேரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய ரவுடியான பினு தப்பியோடியதையடுத்து அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரம் காட்டிவந்தனர்.

பினு சரணடையவில்லை எனில் அவரைச் சுட்டுப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தனர். பினுவின் கூட்டாளிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டுவந்த நிலையில் பினு தலைமறைவாகவே இருந்தார்.

இந்நிலையில், பினு, அம்பத்தூர் காவல் துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் இன்று சரணடைந்தார். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்குப் பயந்து காவல் துறையில் பினு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பினு மீது கொலை, கொள்ளை என 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon