மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வாய்ப்பைப் பயன்படுத்துமா இந்தியா?

வாய்ப்பைப் பயன்படுத்துமா இந்தியா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி சென் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 13) நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை பெறாத வெற்றிகளைப் பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 25 வருடங்களாக இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு தொடரையும் கைப்பற்றியது கிடையாது. ஆனால், இந்த முறை சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை நடைபெற்று முடிந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் மட்டும் தோல்வியடைந்து 3-1 என முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை இதுபோன்ற வாய்ப்பு இந்திய அணிக்கு எட்டியதில்லை. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் எளிதில் தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்கும். இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருந்தாலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு வாய்ப்பை வழங்காமல் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இன்று போட்டி நடைபெறும் சென் ஜார்ஜ் பார்க் மைதானத்தைப் பொறுத்தவரை முதல் பேட்டிங் மற்றும் இரண்டாவது பேட்டிங் செய்யும் இரண்டு அணிகளுக்கு சமமானதாகவே இருந்து வந்துள்ளது. திறமையைக்கொண்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்கும். கடைசியாக நடைபெற்ற நான்காவது ஒருநாள் (பிங்க் டே) போட்டியில் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. எனவேதான் இம்ரான் தாகிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்திய அணி தவறுதலாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. எனவேதான் மோசமான தோல்வியைத் தழுவியது. அதேபோல் இன்று போட்டி நடைபெறவிருக்கும் சென் ஜார்ஜ் பார்க் மைதானமும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது. இந்திய அணி இந்த முறை சரியான தேர்வை மேற்கொண்டு வெற்றி பெறுமா எனப் பொறுத்திருந்து காண்போம்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon