மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

சாலைப் பணிகளில் தொழில்நுட்பம் தேவை!

சாலைப் பணிகளில் தொழில்நுட்பம் தேவை!

இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்களைத் துரிதப்படுத்த பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைப் புகுத்தி, சிறந்த மேலாண்மைக்கு வழிவகுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில், சாலை கட்டுமானக் குறியீடு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமானத் திறன் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்திய நெடுஞ்சாலைகள் திறன் கையேட்டை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, “நம் நாட்டில் சாலைக் கட்டமைப்புகளில் சர்வதேச நாடுகளை விடப் பின்தங்கிய நிலையிலேயே பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைகள் அமைப்புப் பணிகளுக்கான வேகம் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு இல்லாமல் மிகவும் மந்தமாகச் செயல்படுகிறது. எனவே நமது அணுகுமுறைகளை மாற்றி பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு சாலை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். சாலை அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல நம்மால் ஏன் செயல்பட முடியாது?” என்று பேசினார்.

பாரத்மாலா திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் கோடி முதலீட்டில் 83,000 கிலோ மீட்டர் அளவிலான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் சராசரியாகத் தினசரி 41.09 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தினசரி சராசரியாக 22.55 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடையவேண்டுமானால் தினசரி 56.85 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon