மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் :தமிழிசை

பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் :தமிழிசை

தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வாரின் மண் என்று குறிப்பிட்ட தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியைக் கொண்டுவருவோம்” என்றும் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று பிப்ரவரி 12 இரவு பாஜக சார்பில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,”காவிமயமாக இருந்தால் ஆன்மிக அரசியலோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று கமல் சொல்கிறார். ஆன்மிக அரசியல் வேறு காவி அரசியல் வேறு அல்ல. ஆன்மிக அரசியல் என்றாலே காவி அரசியல்தான். தேசியக் கொடியில் காவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்திலும் காவி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்; அண்ணா மண் அல்ல, ஆண்டாள் மண். அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ். நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியைக் கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றும், ஆன்மீக அரசியலுக்கு வித்திட்டதே பாஜகதான்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். மத்திய நிதியமைச்சராக அவர் இருந்தபோது மக்களுக்கான ஒரு நல்ல திட்டத்தைக் கூடக் கொடுக்கவில்லை. மோடியின் அரசைப் பற்றி குறைசொல்ல ப.சிதம்பரத்திற்கு உரிமை இல்லை. அதுபோல் பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி குறைசொல்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேர்ச்சி பெறட்டும். அதன் பின்பு மோடியைக் குறைசொல்லலாம். அவரது கட்சியிலேயே அவர் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார். அவருக்கும் மோடியைப் பற்றிக் குறைசொல்லத் தகுதியில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கடன் வாங்குவதற்காக மட்டுமே பிரதமர்கள் வெளிநாடு சென்றனர். ஆனால் மோடியின் ஆட்சியில், மற்ற நாடுகளுக்குக் கடன் கொடுப்பதற்காகப் பிரதமர் வெளிநாடு செல்கிற நிலைமை உருவாகியுள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. தனது கட்சிக்குத் தலைவராகக்கூட முடியாத ஸ்டாலின் எப்படித் தமிழகத்தின் முதல்வராக முடியும்” என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon