மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

செவிலியர் தற்கொலை: தீவிரமடையும் போராட்டம்!

செவிலியர் தற்கொலை: தீவிரமடையும் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் மணிமாலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

கடலூர் மாவட்டம், பெரிய கரிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாலா, திருப்பூரிலுள்ள வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 2 ஆண்டுகளாகச் செவிலியராகப் பணியாற்றிவந்தார்.

இந்தச் சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராகத் தமயந்தியும், உதவி மருத்துவராகச் சக்தி அகிலாண்டீஸ்வரியும் பணிபுரிகின்றனர். கடந்த 8ஆம் தேதியன்று மருத்துவர் சக்தி அகிலாண்டீஸ்வரி பணிக்கு வரவில்லை. இதை மருத்துவர் தமயந்தியிடம் மணிமாலா தெரிவிக்காததால், இது குறித்து ஒரு விளக்கக் கடிதம் அளிக்குமாறு மணிமாலாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மணிமாலா கடந்த சனிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மணிமாலாவின் உறவினர்கள் இந்தத் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், இந்தத் தற்கொலைக்குக் காரணமான மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டீஸ்வரி ஆகிய இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கேயம் அரசு மருத்துவமனை முன்பு தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் (பிப்ரவரி 13) போராட்டம் நடத்துகிறார்கள்.

அரசு அனைத்து ஊழியர்கள் சங்கம், எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம், தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இங்கு பணிபுரியும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டம் தீவிரமடைந்துவருவதால் காவல் துறையினர் அதிகளவில் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாளை அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon