மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

இந்தியப் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி!

வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தைத் தாண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தக & தொழில் துறைக் கூட்டமைப்பு, பிசினஸ் லைன் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் பிப்ரவரி 12ஆம் தேதி பங்கேற்ற மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரான பியூஷ் கோயல் பட்ஜெட்டுக்குப் பிந்தைய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், “முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 5.3%, 6.3% என்ற வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியானது வளர்ச்சியில் ஒரு திருப்தியை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது. அதேபோல, நிதிப் பற்றாக்குறையில் முந்தைய அரசின் அளவான 5.9 சதவிகிதத்தை விட மிக மிகச் சிறந்த இலக்கை நோக்கி (3.2%) தற்போதைய அரசு பயணிக்கிறது” என்றார்.

2017-18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. எனினும், சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் சீராகி இயல்பு நிலை திரும்பி வருவதால், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகித வளர்ச்சியை இந்தியா பதிவு செய்யும் என்று ரிசர்வ் வங்கி தனது ஆய்வறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது பியூஷ் கோயல், இந்த நிதியாண்டில் 6.7 சதவிகித வளர்ச்சியையும், வரும் 2018-19 நிதியாண்டில் 7.5 சதவிகித வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon