மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் அதிக சொத்து மதிப்புள்ள முதல்வர்கள் பட்டியலில் 177 கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கடைசி இடம் பிடித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் மற்றும் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமான புள்ளிவிவரங்களை டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்னும் தன்னார்வ அமைப்பு வெளியிட்டுவருகிறது. தற்போது மாநில முதல்வர்களின் சொத்துக் கணக்கு மற்றும் அவர்கள் மீதுள்ள வழக்குகளின் புள்ளிவிவரங்களை அச்சங்கம் வெளியிட்டுள்ளது.

29 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேச முதல்வர்களின் சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்தியாவிலுள்ள முதல்வர்களில் அதிக சொத்துக்களுடன் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 177 கோடி. அடுத்த இடத்தை பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு வகிக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி. 48 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் உள்ளவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியின் சொத்து மதிப்பு 55 லட்சம் ரூபாய்; மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு 30 லட்சம் ரூபாய். பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 கோடியே 80 லட்சம் ரூபாயுடன் 12ஆவது இடம் வகிக்கிறார். புதுவை முதல்வர் நாராயணசாமி 9 கோடி ரூபாயுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறார்.

முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு 16 கோடி ரூபாயாக உள்ளது. 31 முதல்வர்களில் 25 முதல்வர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர். 55 சதவிகித முதல்வர்களின் சொத்து மதிப்பு 1 கோடியிலிருந்து 10 கோடி வரை உள்ளதாகவும், 19 சதவிகித முதல்வர்களின் சொத்து மதிப்பு 1 கோடிக்குக் குறைவாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர்களின் மீதுள்ள வழக்குகளின் புள்ளிவிவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 22 வழக்குகளுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முதலிடத்தில் உள்ளார். இதில் 3 வழக்குகள் சீரியசான குற்ற வழக்குகள். அவருக்கு அடுத்தபடியாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளார். இவர் மீது 11 குற்ற வழக்குகள் உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது 10 வழக்குகள் உள்ளன.

39 சதவிகித முதல்வர்கள் பட்டதாரிகளாகவும், 32 சதவிகிதம் பேர் தொழிற்கல்வி படித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 16 சதவிகிதம் பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளதாகவும், 10 சதவிகிதம் நபர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளதாகவும், சிக்கிம் மாநில முதல்வர் மட்டும் முனைவர் பட்டம் வாங்கியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் ஆதாரம்: ADRindia

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon