மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

நாகினியாக வரும் ராய் லட்சுமி

நாகினியாக வரும் ராய் லட்சுமி

நீயா 2 படத்தில் மூன்று விதமான வேடங்களில் நடிப்பதாக ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகில் வலம்வந்த ராய் லட்சுமி ஜூலி 2 படத்தின் மூலம் கடந்த ஆண்டு இந்தியில் அறிமுகமானார். தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ள ராய் லட்சுமி, ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.

எத்தன் பட இயக்குநர் சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்ட ராய் லட்சுமி, “பேன்டஸி, த்ரில்லர், காதல் எனப் பல ஜானர்களை உள்ளடக்கி இப்படம் தயாராகிவருகிறது. பாம்பை மையமாக வைத்தே உருவாகிவருகிறது. மூன்று வேடங்களில் நடிக்கிறேன். அதில் ஒன்று ‘நாகினி’ கதாபாத்திரம். படத்தில் இடம்பெறும் மூன்று கதாநாயகிகளும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என வெவ்வேறு காலப் பின்னணியில் தோன்றுகிறோம். நான் மற்ற கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் உள்ளன” என்று கூறியுள்ளார்.

“1979ஆம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான ‘நீயா’ படத்தை நினைவுபடுத்தும் விதமாக இருந்தாலும் இப்படம் நிறைய மாறுபட்டு, முற்றிலும் புதுமையாக இருக்கும்” என ராய் லட்சுமி கூறியுள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் நடித்துவரும் ராய் லட்சுமி, ஐந்து படங்களைக் கைவசம் வைத்துள்ளார். “விரைவில் எனது இரண்டாவது பாலிவுட் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன். மலையாளத்தில் மம்மூட்டி சாருடன் இணைந்து நடித்துவருகிறேன். அவரோடு நான் பணியாற்றும் ஐந்து அல்லது ஆறாவது படமாக இது இருக்கும்” என்றும் ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon