மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பாஜகவுடன் கூட்டணி இல்லை!

பாஜகவுடன் கூட்டணி இல்லை!

பாஜக மட்டுமல்ல யாருடனும் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், விஜயகாந்த் மட்டும் மென்மையான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்தார். அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க தேமுதிக மட்டும் நீட் அவசியம் வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. தொடர்ந்து ஆண்டாள் விவகாரத்திலும் பாஜகவிற்கு ஆதரவாகவே விஜயகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நீட் மற்றும் ஆண்டாள் விவகாரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் பாஜகவிற்கு ஆதரவு என்று கூறிவிடுவது. எதிராகக் கருத்து தெரிவித்தால் மற்றொரு பக்கம் ஆதரவு என்று முடிவு செய்துகொள்ளக் கூடாது. பாஜக மட்டுமல்ல யாருடனும் நாங்கள் கூட்டணிக்கு செல்ல மாட்டோம். தேமுதிகவுக்கென்று ஒரு கொள்கை உள்ளது.எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் சொல்கிறோம். பல கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிக்கக்கூடிய நிலை தற்போது உள்ளது. நீட் தேர்வு வந்தால், சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முறைகேடு இல்லாத நீட் தேர்வு வந்தால் அதனை தேமுதிக ஆதரிக்கும்" என்று கூறினார்.

மேலும் அவர், "ஜெயலலிதா படத்தை திறக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமைக் கழகம் உள்ளது. ஜெயலலிதாவால் அமைச்சர் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளில் படத்தைத் திறக்கலாம் ஆனால் ஒரு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் உருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் அவருடைய படத்தை வைப்பதை ஏற்றுக்கொண்டிருப்போம்" என்றும் கூறினார். அண்மையில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் பாஜகவால் கையையும் ஊன்ற முடியாது. காலையும் ஊன்ற முடியாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon