மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிப் போராட்டம்!

ஸ்டெர்லைட்  ஆலையை மூடக் கோரிப் போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிப் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் என அனைத்தையும் நஞ்சாக மாற்றி, மனித உயிர்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றக் கோரிப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுந்துவருகிறது.

ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுவரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுர பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று (பிப்ரவரி 12) காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலையிலும் தொடர்ந்து பின்னர் விடிய விடிய போராட்டம் நீடித்தது.

வி.வி.டி. சிக்னல் அருகில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும், “எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” எனக் கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது கலைந்து செல்வதுபோல எழுந்து சென்று சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு அமர்ந்து மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

இரவு முழுவதும் நீடித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் தோல் நோய், புற்று நோய் என அனைத்து விதமான நோய்களும் ஏற்படுவதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மக்கள் மறுத்துவிட்டனர்.

எவ்வளவு நாள் ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிவிட்டதால் அரசின் கவனத்திற்கு மக்களின் கோரிக்கையை எடுத்துச் செல்வதாகக் கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon