மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வரி விதிப்பு: மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

வரி விதிப்பு: மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

இந்திய அரசானது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான பாலமாக அமைய வேண்டும் என இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின் போது வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, உற்பத்திச் செலவை விட 50 சதவிகிதம் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இதனால் கிராமப்புற விவசாய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர். ஆனால் இதன் தாக்கம் பருப்பு வகைகள், கோதுமை, அரிசி போன்ற பொருட்களுக்கான ஆதரவு விலையின் மூலமாகத் தெரிந்துவிடும் என்று ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிக்கை தெரியப்படுத்துகிறது. காய்கறிகள், பழங்களின் மோசமான ஏற்ற இறக்க விலையினால் பணவீக்கம் 4 சதவிகித இலக்கை கூட அதிகரிக்கலாம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து அசோசெம் கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் ஜஜோடியா பேசுகையில்,” இந்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் நாட்டில் பணவீக்கம் அதிகமாகும் நிலை உள்ளது. மொத்தத்தில் அரசின் கொள்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்குமா அல்லது நுகர்வோருக்கு ஆதரவாக இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்தியாவின் கிராமங்களில் அதிக தானியங்கள் உற்பத்தி செய்யும் நில உரிமையாளர்களை விட நிலமற்ற தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். கிராமப்புறங்களில் குறிப்பாக ஊதியம் பெறுபவர்கள் பணவீக்க பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் அதிக வரி விதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon