மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஆந்திரா 60% தமிழ்நாடு 5.34%: முதலீட்டாளர் மாநாடு தேவையா?

ஆந்திரா 60%  தமிழ்நாடு 5.34%: முதலீட்டாளர் மாநாடு தேவையா?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மத்தியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இதைக் கேட்டு சிரிப்பு வருவதாகக் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதலீடுகளையே ஈர்க்காத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாட்டில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும்கூட, அது கடமைக்கு விளம்பரம் தேடும் நிகழ்ச்சியாக மட்டுமே அமைகிறது. இதனால் யாருக்கும் பயன் கிடையாது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்த மாநாடு, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்த ஜெயலலிதா முதலமைச்சராக்கப்பட்ட பிறகுதான் நடத்த வேண்டும் என்பதற்காக 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள அளவில் எந்த விதமான தொழில் வளர்ச்சியோ, வேலைவாய்ப்புப் பெருக்கமோ ஏற்படவில்லை. இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி மட்டும் தான். இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் வெறும் 5.34 விழுக்காடு மட்டும்தான்’’ என்று புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டுகிறார் ராமதாஸ்.

தமிழக முதலீட்டாளர் மாநாட்டை, ஆந்திர தொழில் முதலீட்டாளர் மாநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார் அவர். “அண்மையில் ஆந்திரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் இதுவரை 60 விழுக்காட்டுக்கும் கூடுதலான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. அதனால் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதுபோல நடத்தப்பட வேண்டும். மாறாக பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறாகும்’’ என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon