மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு!

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு!

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வு "நீட்" ஆகும். மருத்துவம் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examination - FMGE) எழுதிய பின்பே இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய முடியும்.

இந்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, “வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு நடத்தும் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அந்தத் தேர்வில் 10% பேர்கூட தேர்ச்சி பெறுவதில்லை. எனவே வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவதுதான் நல்லது. அதேநேரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் 2018-19ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகமும் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon