மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஜெ.படம் திறப்பு: உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!

ஜெ.படம் திறப்பு: உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் முக்கியப் பணிகளில் இருப்பார்கள் என்பதால்தான் தற்போது படத்தைத் திறந்தோம். அவருக்கு நினைவு மண்டபம், நினைவு இல்லம் போன்றவை அமைக்க இருக்கிறோம். வருங்காலத்தில் அவரது புகழைப் பரப்பும் வகையில் பல்வேறு நல்ல செயல்களைச் செய்வோம். சட்டப்பேரவையில் எம்ஜிஆரின் உருவப்படத்தை ஜெயலலிதாதான் திறந்துவைத்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசோடு இணக்கமாகத் தமிழக அரசு சென்றுகொண்டிருக்கிறது. உருவப்படம் திறப்பு நிகழ்ச்சிக்கு பாஜகவை அழைத்தால் தமிழக அரசு பாஜகவின் பினாமி அரசு என்று விமர்சிப்பார்கள். அழைக்காவிட்டாலும் விமர்சனம் வரும்.

வேலைவாய்ப்பாகட்டும், டெண்டராகட்டும்; அனைத்துமே வெளிப்படைத்தன்மையோடுதான் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் பாகுபாடின்றி அனைவருக்குமே வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “கமல் மட்டுமல்ல அனைவருமே கிராமங்களை தத்தெடுக்கலாம். ஊடகங்கள் கூட கிராமங்களை தத்தெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் இந்த நல்ல விசயம்தான். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் கிராமங்கள் இன்னும் வளர்ச்சியடையும்” என்றும் அவர் கூறினார்.

மின்வாரிய ஊழியர்களிடையேயான பேச்சுவார்த்தை தோல்வி குறித்த கேள்விக்கு, “ திமுக அரசு தோல்வியடைந்ததற்கு காரணமே மின் தட்டுப்பாடுதான். சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. அத்தகைய மின்சாரத்தை வழங்கும் மின் வாரியத்தைப் பேணி காப்பதில் அதிமுக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. மின் ஊழியர்களின் நலன் பாதுகாக்கும் வகையில் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்” என்று பதிலளித்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon