மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்; தினகரன்

குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்; தினகரன்

பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று (பிப்ரவரி 12) சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், அந்தத் தொகுதியில் தனது அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமெனக் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான தினகரன், கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அவர் மக்களைச் சந்திக்கும் நிகழ்வுக்குப் ’புரட்சிப் பயணம்’ என்று பெயரிட்டுள்ளனர் அவருடைய ஆதரவாளர்கள். மக்கள் கூடியிருக்கும் பகுதியில் திறந்த வேனில் நின்றவாறே, தனது ஆதரவாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார் தினகரன்.

மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள செண்டாங்காடு. திமுக, அதிமுக கட்சிகளில் அங்கம் வகித்த எஸ்டிஎஸ், 1991ஆம் ஆண்டு அமைந்த அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி நமது கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கியவர். அதன் பின், தனது இறுதிக் காலத்தில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2001ஆம் ஆண்டு மறைந்த எஸ்டிஎஸ்ஸுக்கு, அவரது சொந்த ஊரான செண்டாங்காட்டில் தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் சிலை அமைக்கப்பட்டது. இதனை நேற்று திறந்துவைத்தார் தினகரன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு, தினகரன் பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகே கூடியிருந்த மக்களிடையே பேசினார்.

அப்போது, தமிழகத்தில் நடந்துவரும் மக்கள் விரோத ஆட்சி முடிவுக்குவந்து, விரைவில் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும் என்று தெரிவித்தார். ”ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற, இங்குள்ள எண்ணற்ற மக்கள் எனக்காகப் பணியாற்றினர். இவர்களால்தான் நான் வெற்றி பெற்றேன். உண்மையான இயக்கத் தொண்டர்கள் நம் பக்கம்தான் உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அவர்கள் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுவிட்டனர். வருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பேசினார்.

பேருந்துக் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தவுடன் கட்டண உயர்வு ரத்து செய்யப்படும் என்றும் தினகரன் உறுதியளித்தார். மேலும், பட்டுக்கோட்டை வட்டாரத்திலுள்ள மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றார்.

குக்கர் சின்னத்தை தினகரன் அணிக்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒதுக்காத நிலையில், தனது ஆதரவாளர்கள் அந்தச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துவருகிறார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon