மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஃபுட் கோர்ட்: ட்ரெண்டாகும் வீகன் டயட்!

ஃபுட் கோர்ட்: ட்ரெண்டாகும் வீகன் டயட்!

இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது வீகன் டயட். வில்லியம் லாம்பேங்கிறவர்தான் (1765-1848) இந்த வீகன் டயட்டின் தந்தை என்று சொல்லப்படுகிறார். வீகன் டயட் எடுத்துக்கொள்பவர்களை ஒபிசிட்டி, டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மலச்சிக்கல், தோல் வியாதி எதுவும் தாக்காது. சில வகை கேன்சர்கூட வராமல் தடுக்க வீகனால் முடியும். ஆமாம். அது என்ன வீகன் டயட்ன்னு கேக்கறீங்களா? இது பற்றிக் கூறுகிறார் ‘வீகன் டயட்’ என்ற பால் இல்லாத உணவுமுறையைப் பிரபலப்படுத்திவரும் மருத்துவர் சரவணன்.

வீகன் டயட்

“டயட்னாலே சாப்பாட்டைத் தவிர்க்கிறதுனு நம்மகிட்ட ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கு. இது சாப்பாட்டைத் தவிர்க்கறது இல்ல. சாப்பாட்டில் சிலவற்றைத் தவிர்க்கிறது. கறி, மீன், முட்டை, மட்டுமில்லாம பாலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களும், தேனும்கூட சாப்பிடாம இருக்கறதுக்குப் பேர்தான் வீகன் டயட். அதாவது காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய்கள் போன்ற தாவர உணவுகளை அடிப்படையாகக்கொண்ட உணவுமுறை. நம் நாட்டைப் பொறுத்தவரை சமணர்களும் வள்ளலாரும் இந்த உணவுமுறையைப் பின்பற்றியவர்கள்” என்று கூறும் இவர், “அசைவ உணவுகள்ல இருக்கிற புரதம், கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ரால் இதெல்லாம் நச்சுப் பொருட்களா செயல்பட்டு நிறைய வியாதிகளை ஏற்படுத்தும்னு மருத்துவ உலகம் சொல்லுது. அதுக்கெல்லாம் தீர்வுதான் இந்த வீகன் டயட்” என்று சொல்கிறார்.

மேலும் “உலகம் முழுக்க இருக்கும் சிறந்த 100 மருத்துவர்கள் ரீதிங்க் ஃபுட் (RETHINK FOOD) புத்தகத்துல வீகன் டயட் மூலமா பல்வேறு வியாதிகளைக் குணமாக்க முடியும்னு ஆதாரத்தோட விளக்கியிருக்காங்க” என்று தெரிவிக்கிறார்.

எப்படி ஆரம்பிக்கறது?

“எந்த வயதில் வேணும்னாலும் இதைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். இந்த டயட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது வியாதிகள் இருந்தா அவங்க சர்க்கரை, மைதா, ஃபாஸ்ட் ஃபுட், எண்ணெய் பதார்த்தத்தைத் தவிர்க்கணும்.”

அசைவ உணவு சரி, பால்கூட ஏன்?

“ஆரோக்கியத்தைக் கெடுக்கிற உணவுகளில் பாலுக்கும் இடமுண்டு. இதைப் பலராலும் ஜீரணிக்க முடியாது. உலகில் வாழும் மக்களில் பலருக்குப் பாலை ஜீரணிக்கும் என்சைம்களே கிடையாது. பாலில் CASEIN புரதம் சில வகைப் புற்றுநோய்கள் உட்பட வேறு சில நோய்களையும் உருவாக்க வாய்ப்பிருக்கு. இப்போதெல்லாம் மாட்டுக்கு ஊசி போட்டுதான் பால் கறக்கறாங்க. ஊசி போடுவதால் பாலில் இயற்கையாக இருக்கிற கேஸின் மட்டும் இல்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோன்கள், யூரியா இதெல்லாம் கலந்திருக்கும். இது இன்னும் கெடுதல். ஸ்வீடன் நாட்டுல வெளியிட்ட ஆய்வறிக்கையில் பால் குடிப்பதால் எலுப்புத் தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்னு சொல்லியிருக்காங்க” என்று அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்கிறார்.

“அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் பல ஹாலிவுட் ஸ்டார்ஸ் வீகன் டயட் பிரியர்கள்தான். இப்போது இந்தியாவிலும் பல பிரபலங்கள் இதைப் பின்பற்றத் தொடங்கியிருக்காங்க. டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் வீகன் ஹோட்டலும் உருவாகிட்டு வருது” என்று கூறுகிறார்.

இதெல்லாம் சரி, வீகன் டயட்ல மைனஸ் ஏதாவது இருக்கா?

“கண்டிப்பா கிடையாது. நமக்கு விருப்பமானால் ஆம்லெட் முதல் ஐஸ்க்ரீம் வரை, பிரியாணி முதல் பாயசம் வரை எல்லா உணவுகளையும் தாவரப் பொருள்களை வைத்தே சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால், இது பச்சைக் காய்கறிகளை சிரமப்பட்டு சாப்பிடுவது போலிருக்கு. இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வாய்ப்பிருக்குனு நிறைய பேருக்குத் தோணலாம். இது முற்றிலும் தவறு. வீகன் டயட் என்பது சத்தான உணவுமுறை. மற்ற விலங்கின் ஹார்மோன் வேறு. நம் ஹார்மோன் வேறு. அவை நம்முடன் ஒத்துப்போக வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவற்றைத் தவிர்க்கலாமே. அவற்றைத் தவிர்ப்பதில் தவறில்லையே. நான் சமீபத்தில் படித்த வாசகம் ஒன்று. பால் சிறந்ததுதான், ஆனால் அதன் குட்டிக்கு. நமக்குச் சிறந்தது தாய்ப்பால். மாட்டுப்பால் அல்ல” என்று கூறி சிரிக்கும் இவர், வீகன் உணவுமுறையைப் பற்றி பலரிடமும் பகிர்ந்துவருகிறார்.

“நான் சிலரிடம் வீகன் டயட் பற்றிக் கூறினேன். இதன் விளைவு என்னன்னு கேட்டாங்க. இதைப் பின்பற்றினால் பல வருடம் ஆரோக்கியமாக வாழலாம்னு கூறினேன். இல்லைனான்னு கேட்டாங்க. கஷ்டப்பட்டுதான் வாழணும்னு சொன்னேன். பரவாயில்ல. 60 இருந்தா போதும்னு சொன்னாங்க. ஆனா அவங்க புரிஞ்சிகிட்டது தவறு. இதைப் பின்பற்றினா வாழும் காலம் வரை நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். இல்லைனா இருக்கும் காலம் வரை கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, நோய் நொடியுடன் வலி தாங்கி வாழ வேண்டியிருக்கும். இன்றைக்கு 30 தாண்டின உடனே பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், கால்சியம் குறைபாடு, மூட்டுவலி இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சி” என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon