மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

எடப்பாடி – ஸ்டாலின் இன்று சந்திப்பு!

எடப்பாடி – ஸ்டாலின் இன்று  சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 13) மதியம் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திக்கவிருக்கிறார்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய, ஜனவரி 25ஆம் தேதியன்று திமுகவில் ஒரு குழுவை அமைத்தார் அக்கட்சியின் செயல் தலைவரும் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, டி.செங்குட்டுவன் மற்றும் மு.சண்முகம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். இரு வார ஆய்வுக்குப் பிறகு, இந்தக் குழுவினர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) தங்களது ஆய்வறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த அறிக்கையை அளிக்க நேரம் ஒதுக்குமாறு ஸ்டாலின் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு, முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து பதில் வரவில்லை என நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேட்டி வெளியான சில மணி நேரத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகத் தமிழக அரசு தகவல் வெளியிட்டது. இதையடுத்து, இன்று மதியம் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழும் என்றும், அப்போது திமுக குழுவின் போக்குவரத்துக்கழகச் சீர்திருத்தம் தொடர்பான ஆய்வறிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் ஸ்டாலின் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon