மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

குற்றவாளி எப்படி கட்சிக்குத் தலைமை தாங்கலாம்?

குற்றவாளி எப்படி கட்சிக்குத் தலைமை தாங்கலாம்?

‘குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் தேர்தலில் போட்டியிட முடியாதபோது, அவர் எப்படி அரசியல் கட்சிக்குத் தலைவராக இருக்க முடியும்?’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ‘ஊழல் வழக்கு, கிரிமினல் வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசியல் கட்சிக்குத் தலைமை ஏற்கவும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா “வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஓர் அரசியல் கட்சிக்கு எப்படி தலைவராக வர முடியும்? குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாது. பின்னர் எப்படி அவர் அரசியல் கட்சி அமைத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும்? நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்யக் கூடாது என்பதை சில முகவர்கள் மூலம் கூட்டாக எப்படிச் செய்யலாம்?” என்று தொடர் கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “தேர்தலில் நேரிடையாக போட்டியிட முடியாதவர், ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு, அரசியல் கட்சியைத் தொடங்குவார், தேர்தலில் அவர்களைப் போட்டியிட வைப்பார். இத்தகைய கூட்டமாக உள்ளவர் ஒன்றாக இணைந்து பள்ளியைத் தொடங்கலாம், மருத்துவமனையைத் தொடங்கலாம். ஆனால், ஆளுமை விவகாரம் என்று வரும்போது இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது தேர்தல் நேர்மை குறித்து கேள்வி எழுப்புகிறது. அது மட்டுமல்லாமல், யார் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒரு கிரிமினல் முடிவு செய்வது ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கு விரோதமானதாகும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த கூடுதல் சொலிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் தேவை எனக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon