மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

கிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயர்!

கிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயர்!

தமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘கிழக்குக் கடற்கரை சாலைக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்ட வேண்டும்’ என்றும், ‘ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’ என்றும் நேற்று (பிப்ரவரி 12) நடந்த அதிமுக மீனவர் அணி கூட்டத்தில் அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து அதிமுக மீனவர் அணியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று பகல் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது.

மீனவர் அணி மாநிலச் செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலக்கிய அணிச் செயலாளர் வளர்மதி, சிறுபான்மை அணி தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,

“சென்னை திருவான்மியூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிழக்குக் கடற்கரை சாலை 782 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையாகும். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், கானாத்தூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. மறைந்த அம்மா அவர்களைச் சிறப்பித்திடும் வகையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கு அம்மா பெயரை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கும் அம்மா பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மீனவர் பிரிவு கேட்டுக் கொள்கிறது” என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெ. பெயரில் பல்கலைக்கழகம்

இதேபோல, “ஜெயலலிதா கல்வியில் சிறந்தவர். இந்திய மொழிகள் மட்டுமல்ல, உலகளாவிய ஆங்கில மொழி இலக்கியத்தையும் அறிந்தவர். சரித்திரம், கலை, ஆன்மிகம் என்று பல துறைகளிலும் பன்முக ஆற்றல் பெற்றவர். இத்தகைய சிறப்புகளுக்கு உரிய அவர் பெயரில், அம்மா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். எனவே அம்மா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சர்ச்சைகள் கிளப்பிவருவது பற்றி அதிமுக மீனவர் அணிச் செயலாளர் நீலாங்கரை முனுசாமியிடம் பேசினோம்.

“எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையில்லை. அம்மா இருக்கும்போதும் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அம்மா இறந்த பின்னும் அவரை எதிர்த்தே அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதன்மூலம் அம்மா என்றைக்கும் நிலைத்திருப்பார் என்பது உறுதியாகிறது.

கிழக்குக் கடற்கரை சாலைக்கு அம்மா பெயரைச் சூட்ட வேண்டும் என்று நான் நிலை குழுத் தலைவராக இருந்தபோது சென்னை மாநகராட்சியிலேயே வலியுறுத்தினேன். அம்மா இருந்தபோதே தொடர்ந்து இதுகுறித்து தீர்மானம் இயற்றினோம். பழைய மகாபலிபுரம் எனப்படும் ஓ.எம்.ஆர். சாலைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலை - ஓ.எம்.ஆர். சாலை இணைப்புச் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எங்கள் தலைவியின் பெயரை கிழக்குக் கடற்கரை சாலைக்குச் சூட்ட வேண்டும் என்று கோருகிறோம். முதல்வரிடத்திலும் துணைமுதல்வரிடத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மீனவர்கள் நிறைந்துள்ள கிழக்குக் கடற்கரை சாலைக்கு அம்மாவின் பெயர் வைப்பதே பொருத்தமானது” என்றார் மீனவர் அணி மாநிலச் செயலாளர் நீலாங்கரை முனுசாமி.

- ஆரா

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon