மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

‘பேட் மேன்’ ரீமேக்கில் தனுஷ்?

‘பேட் மேன்’ ரீமேக்கில் தனுஷ்?

அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பேட் மேன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் மலிவு விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை வடிவமைத்துச் சாதனை புரிந்தார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களுக்காக மலிவு விலையில் நாப்கின்கள் தயாரிக்கும் முடிவை எடுத்து அதற்காகப் பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் அனுபவித்தாலும் அவற்றை எல்லாம் தாண்டித் தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்த முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்ஷய் குமார் நடித்த படம் ‘பேட் மேன்’. கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ராதிகா ஆப்தே, சோனம் கபூர் இணைந்து நடித்துள்ளனர்.

வெற்றி பெற்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சாதாரண நடைமுறைதான். தமிழர் ஒருவரின் வாழ்க்கையைத் இயக்குநர்களில் ஒருவர் திரைக்குக்கொண்டு வருவதற்கு முன் இந்தித் திரையுலகினர் அதைச் செய்துமுடித்து வெற்றி பெற்றுள்ளனர். சமூகக் கருத்துகளை வலியுறுத்துவதுடன் சுய முன்னேற்றச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்கும் இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்ஷய் குமார் ஏற்று நடித்திருந்த வேடத்தில் தமிழில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. தனுஷ் தற்போது பல படங்களில் நடித்துவருவதோடு ப.பாண்டி படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறார். எனவே. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழில் தனுஷ் போன்ற கதாநாயகர்கள் நடிக்கும்போது முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவருவதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமையும்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon