மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஹெல்த் ஹேமா: காதல் உணவுகள்!

ஹெல்த் ஹேமா: காதல் உணவுகள்!

சாக்லேட், ஒயின், பூண்டு, சிப்பி, அவகோடா போன்றவை மட்டுமல்லாது மேலும் சில பொருள்களைச் சாப்பிடுவதால் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதல் ஆசைகளைத் தூண்டும். ஆனால், காதல் உணர்வு கரை புரண்டு ஓட ஒரே நாளில் அனைத்தையும் சாப்பிட்டு விடாதீர்கள்.

ஆயுர்வேதத்தின்படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது. இதன் விதைகளை உண்டால் காதல் ஆசை அதிகமாகும். அஸ்பாரகஸ் சுவையுள்ள தோட்டக் கீரை.

பாதாம் பருப்பு - தொன்றுதொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தியையும் அளிக்கும் உணவாகக் கருதப்படுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் பி வைட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனைத் தயாரிக்கத் தேவை. எனவே, வாழைப்பழம் ஆண்மையைப் பெருக்கும், காதல் ஆசையை அதிகமாக்கும்.

சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் வேட்கையைப் பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி ஆக்சிடான்ட். பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. பிரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொட்டு இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். ஆனியன் சூப் புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் பிறப்பு உறுப்புகளின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

பால் அதுவும் எருமைப்பால், தயிர் (பகலில்) மோர், வெண்ணெய், நெய் போன்றவையும் காதலுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதி மீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்து சிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது காதல் ஆசையைத் தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணர்வை அதிகப்படுத்தும் மருந்தாகக் கருதப்படுகிறது.

ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபகமிருக்கட்டும்... இலவங்கப்பட்டைதான் ஆசையை ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையைக் குறைத்து விடும்.

சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழு தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதைத் தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச் சிப்பிகள், பறங்கி விதைகள், முட்டைகள். எல்லா பழங்களிலும் காய்கறிகளிலும் இருக்கும் பொட்டாசியம் காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள். மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவையும் காதல் உணர்வுகளை அதிகப்படுத்த உதவும்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon