மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

என் உரிமையை ராகுல்கூட பறிக்க முடியாது!

என் உரிமையை ராகுல்கூட பறிக்க முடியாது!

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை ஆதரிப்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும், இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திகூட பறிக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியிருக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் உருவப் படம் திறக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை முற்றியிருக்கிறது. படத்திறப்பு நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செல்லக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டிருந்த நிலையில்... அந்த நிகழ்ச்சி முடிந்த பின் சட்டமன்றம் சென்று ஜெ.வின் படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில்... விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை முடிவெடுத்துள்ளது. இதுபற்றி நேற்று (பிப்ரவரி 12) தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய விஜயதாரணி, “ஜெயலலிதாவின் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. அதன்படி நான் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் ஜெயலலிதா என்ற பெண் ஆளுமைக்குச் சட்டமன்றத்தில் படம் திறக்கப்பட்டதைத் தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கிறேன். ஒரு மகிளா காங்கிரஸ் நிர்வாகி என்ற முறையில் அரசியலில் சாதித்த பெண்ணான ஜெயலலிதாவை ஆதரிக்காமல் இருக்க முடியாது.

இது எனது தனிப்பட்ட உரிமை. இந்த உரிமையை எனது தலைவர் ராகுல் காந்திகூட பறிக்க முடியாது. நான் வெளிப்படையாக ராகுல் காந்தியிடமே கேட்கிறேன், திருநாவுக்கரசரிடம் கேட்கிறேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தபோது வந்து பார்த்தீர்களே, அவர் இறந்தபோது வந்து அஞ்சலி செலுத்தினீர்களே, அப்போதெல்லாம் அவர் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லையா?

ஒரு பெண்ணாக, பெண் அரசியல்வாதியாக, பெண்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்வை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார் விஜயதாரணி.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon