மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஈஷா யோக யக்ஷா கலை விழா: மூங்கிலில் தெரிந்த முரளி

ஈஷா யோக யக்ஷா கலை விழா: மூங்கிலில் தெரிந்த முரளி

கிருஷ்ண பாகவதர்

கோவை ஈஷா சார்பில் யக்ஷா கலை விழா முதல் நாள் நிகழ்ச்சி.

10.02.2018. மாலை 6.45

இந்துஸ்தானி புல்லாங்குழல் இசை

ராகேஷ்குமார் சௌரஸ்யா - புல்லாங்குழல்

சத்யஜித் தல்வார் – தபேலா

உலகம் முழுவதும் அறிந்த பண்டிட் ஹரிபிரசாத் சௌரஸ்யாவின் சகோதரன் மகன் என்ற பெருமையை உடைய ராகேஷ்குமார் சௌரஸ்யாவின் இந்துஸ்தானி புல்லாங்குழல் இசை செவிகளுக்கும் மட்டுமின்றி விழிகளுக்கும் விருந்தளிக்கும் ஒரு விசேஷ நிகழ்வாக அமைந்தது. ஈஷா யோக மையம் சிவராத்திரி தினத்தையொட்டி கோவையில் நடத்திய யக்ஷா இசை விழாவின் முதல் நாளன்று இவருடைய புல்லாங்குழலிசைக் கச்சேரி நடைபெற்றது.

திறந்தவெளி அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் பாதிக்கும் மேல் இளைஞர்களாக இருந்தும் நிகழ்வின் இறுதிவரை சிறிய ஒரு கவனச் சிதறலும் இன்றி கச்சேரியுடன் அவர்கள் ஒன்றியதைக் காண முடிந்தது. கச்சேரியின்போது அரங்கில் நிலவிய பரிபூரண நிசப்தம் இசையின் மீதான அசாத்தியமான மரியாதையை வெளிப்படுத்தியது.

நெடிய உயரமும் நெற்றியில் புரளும் கேசமும் சிவந்த நிறமும் எப்போதும் சிந்தும் புன்சிரிப்பும் கொண்ட ராகேஷ் வந்து மேடையில் அமர்ந்த உடனேயே கச்சேரி பாதி களை கட்டிவிட்டது.

இந்துஸ்தானி இசை மரபின்படி பின் மாலை - முன் இரவுப் பொழுதில் பாடும் ராகங்களில் ஒன்றான பூர்யா கல்யாண் ராகத்தில் தனது 25 நிமிட ஆலாபனையைத் தொடங்கிய ராகேஷ் அந்த ராகத்தில் ‘விளம்பி கால்’ என்று அழைக்கப்படும் ஆரம்ப நிலை அறிமுகத்தை அழகாக வாசித்தார். ஆன்மிக உணர்வை நன்றாக எடுத்துக்காட்டும் யமன் மற்றும் பூர்யா ராகங்களின் சங்கமமாக விளங்கும் பூர்யா கல்யாண், பூர்யா தாட் பிரிவின் ஒரு மிஸ்ர ராகமாகத் திகழ்கிறது. கர்னாட இசையில் மேளகர்த்தா என்று அழைக்கப்படும் மூல ராகப் பிரிவே தாட் என்று இந்துதானி இசையில் அறியப்படுகிறது.

ஆதி வாத்தியத்தின் அற்புதம்

மனிதக் குரல் போன்றே ஒலிக்கும் வாத்தியம் என்று பெருமைக்கு உரிய புல்லாங்குழல் இதன் பொருட்டே ஆதி வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் காட்டில் எழுந்த ஒலியின் மூலம் மனிதன் கண்டுபிடித்த முதல் இசை கருவியான புல்லாங்குழல் மட்டுமின்றி அதைத் தனது அதரத்தில் வைத்து அகிலத்தை மயக்கும் அந்த மாயக்கண்ணனும் ‘முரளி’ என்றே போற்றப்படுகிறார்கள்.

இந்துஸ்தானி இசையில், குறிப்பாக வாத்திய இசையில், ஒரு ராகத்தைப் பொதுவாக மூன்று பகுதிகளாக பிரித்து வாசிப்பது மரபு. ‘ஆலாப்’ என்ற முதல் பகுதி, ‘ஜோட்’ என்ற இரண்டாம் பகுதி, பின்னர் ‘பந்திஷ்’, ‘தும்ரி’ ‘ரசனா’ ‘ஃகயால்’ என்ற மூன்றாம் பகுதி. இதில் ஆலாப் என்ற முதல் பகுதி (ஆலாபனை) ‘ஏக்தாள்’ என்ற மெதுவான தாளத்துடன் கூடிய தபேலாவின் பின்னணியுடன் அல்லது தபேலா இல்லாமல் மென்மையான வேகத்தில் இருக்கும். தபேலா பின்னணியில் இருப்பதும் இல்லாததும் கரானா என்ற இசை மரபின் அடிப்படயில் பின்பற்றப்படும். ஜெயப்பூர் கரானா என்ற பிரிவின் பாணியைப் பின்பற்றும் ராகேஷ் செய்த அன்றைய 25 நிமிட ஆலாபனை தபேலா இல்லாமல் நமக்குப் பரிச்சயமான கர்னாடக இசை ஆலாபனை போன்றே இருந்தது.

ரசிகர்களுக்கு வந்தனம் சொல்லி நிகழ்வைத் தொடங்கிய ராகேஷ், அமைதியாக அரை மணி நேரம் சத்யஜித்தின் (தபேலா வாசித்தவர்) தொந்தரவு இன்றி இசையில் மூழ்கி தியானம் செய்யுங்கள் என்று அடித்த ஜோக் பெரிதும் ரசிக்கப்பட்டது.

சேர்ப்பது என்ற பொருள் தரும் ‘ஜோட்’ என்ற இரண்டாம் பகுதியில் தனியாக ஒலித்த ராகக் கோவைகளைத் தாளம் என்ற கட்டுப்பாட்டுக்குள் மெல்ல மெல்லக் கொண்டுவந்து உச்சத்தை நோக்கிச் செல்லும் யுக்தி அழகுடன் வெளிப்படும். தபேலாவின் பங்கு வாத்தியத்துடன் இணையும் இப்பதிவில் ராகேஷ் இசைத்த புல்லாங்குழலின் இசைக்கு ஏற்ப மத்யதாள் என்ற ஒன்பதுவித தாள வேக வேறுபாடுகளுடன் சத்யஜித் தபேலாவில் வாசித்தபோது அரங்கு அவர் வசமாகியது.

இணைந்த இரு மரபுகள்

பூர்யா கல்யாண் ராகத்துக்கு அடுத்து ராகேஷ் வாசித்த தேஷ் ராகம் அடிப்படையில் ஏக்க உணர்வையும் கெஞ்சுதலையும் எழிலுடன் எடுத்துக்காட்டும் சந்தியா ராகங்களில் ஒன்று. இந்துஸ்தானி ராகமாக இருந்தாலும் கர்னாடக இசைக் கச்சேரிகளின் நிறைவுப் பகுதியில் துக்கடாகவாகப் பாடப்படும் இந்த ராகம், ‘துன்பம் நேர்கையில் நீ யாழ் எடுத்து வாசித்து காட்ட மாட்டாயா?’ என்ற, பாரதிதாசன் எழுதி திரை இசைப் பாடலாக அனைவரின் மனதிலும் நிற்கும் ஒரு ராகம்.

ராகேஷ்குமார் இந்த ராகத்தை வழக்கமான வடஇந்திய மற்றும் இந்துஸ்தானி இசை மரபில் இசைக்கவில்லை. கர்னாடக இசை மரபில் தனி ஆவர்த்தனம் என்ற சிறப்பு மிருதங்க வாசிப்புக்கு முன் ஸ்வர பிரஸ்தாபம் என்று ஒரு பகுதி உண்டு. ஒரு ராகத்தின் ஸ்வரங்களை வாய்ப்பாட்டுக் கலைஞர் பல்வேறு விதங்களில் பாடப் பாட, வயலின் அதைப் வாசிப்பவர் பின்பற்றி அதே விதத்தில் வாசித்துக் காட்டுவார்.

கர்னாடக இசை நிகழ்வில் பெரிதும் ரசிக்கப்படும் இந்த சிறப்பு அம்சத்தை, பல புதிய இசை அம்சங்களை இசைப் பாரம்பர்யம் வழுவாமல் புகுத்துவதில் புகழ்பெற்ற ராகேஷ் அன்று நிகழ்த்தினார்.

ராகேஷ் வாசித்த பல பல இந்துஸ்தானி இசை ஸ்வரங்களை அன்று மிக இனிமையான ஸுருதியுடன் தபேலாவில் வாசித்து அனைவரையும் அசத்திவிட்டார் சத்யஜித் தல்வார். வசீகரத் தோற்றம் மட்டுமின்றி ரசிக்கும்படியான உடல்மொழியும் கொண்ட சத்யஜித் தல்வார் சத்குருவின் பக்தர்களை ‘தல்வாரில்’ போட்டு அமிழ்த்துவிட்டார் (“தல்வார்” என்றால் போர் செய்யும் ஆயுதங்களை, குறிப்பாக வாள், ஈட்டிகளை போட்டு வைக்கும் வாளுறை).

பஹாடி துன் என்ற கிராமிய மலை மெட்டுடன் நிறைவடைந்த அன்றைய நிகழ்வு என்றும் நினைத்து மகிழத்தக்க ஒன்று.

துக்கடா

ஹரிபிரசாத் சௌரஸ்யாவின் பெயரில் வரும் சௌரஸ்யா என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?

‘சௌரஸ்ஸி’ என்ற இந்திச் சொல்லுக்கு 84 என்று பொருள். வேதங்களில் காணும் ஒரு குறிப்பின்படி, இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆதியில் இறைவன் படைத்த 84,000 யோனிகளிலிருந்தே தோன்றின என நம்பப்படுகிறது. சௌராஸ்ட்டிஹ என்ற சம்ஸ்கிருத மூலச் சொல்லை தமது அடையாளப் பெயராகக் கொண்டு பெரும்பாலும் வெற்றிலை வியாபாரிகளாக (பின்னர் பான் பீடா) விளங்கும் இந்த உத்தரப்பிரதேச பிராமணர்கள் அந்தப் பெயரைத் தாங்கள் பெற்றதன் காரணமாகக் கூறும் கதை கூடுதல் சுவையானது.

84,000 யோனிகளைப் படைத்த இறைவன் அந்த பெரும் சாதனைக்கு பிறகு சற்று சோர்ந்து காணப்பட்டதைக் கண்ட இவர்கள் அளித்த வெற்றிலையை உண்ட இறைவன் மீண்டும் பெரும் உற்சாகம் கொண்டான். அதனால் மனம் மகிழ்ந்த இறைவன் அளித்த சௌராஸ்ட்டிஹ என்ற பெயரே மருவி, சௌரஸியா என இவர்களின் அடையாளப் பெயராக ஆகியது என்று சொல்வார்கள்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon