மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ரஜினி - கமல் இணைய வேண்டும்!

ரஜினி - கமல் இணைய வேண்டும்!

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சித் தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கட்சி ஆரம்பிப்பதற்காக வரும் 21ஆம் தேதி முதல் மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள கமல்ஹாசன், அன்றைய தினமே கட்சிக் கொடி மற்றும் சின்னத்தை அறிவிக்கவுள்ளார்.

சென்னையில் நேற்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய நக்மாவிடம் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி, கமல் போன்றவர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல. ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் நல்ல இயக்கத்துடன் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “ரஜினி பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது மக்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தும். ஏனெனில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்ஸை இயக்குவதே மத்திய பாஜக அரசுதான். எனவே, பாஜகவுடன் இணைவது குறித்து ரஜினிகாந்த் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

“இந்தியாவில் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பிரச்னை உள்ள நிலையில், பக்கோடாவைப் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி. பக்கோடா விற்பது தவறான வேலை என்று நான் கூறவில்லை. ஒரு பெற்றோர் தன்னுடைய பிள்ளைகள் படித்து அதிகாரிகளாக வேண்டும் என்று ஆசைப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஆனால், அரசு இவர்களை பக்கோடா விற்கச் சொல்கிறது. இதை எதிர்த்துதான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது. மேலும், பாஜக வேலைவாய்ப்பை உருவாக்கவும் முயற்சி செய்வதில்லை” என்றும் நக்மா குற்றம் சாட்டினார். மேலும், ஜெயலலிதாவின் படத்தை தற்போது திறந்தது அவசியமற்றது என்று கூறியுள்ள நக்மா, நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே திறந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய கமல்ஹாசன், தன்னுடைய நோக்கமும் ரஜினியின் நோக்கமும் ஒன்று என்ற போதிலும், இருவரின் பாதைகளும் தனித்தனியானவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon