மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

திட்டத்தைப் புதுப்பித்த ஏர்டெல்!

திட்டத்தைப் புதுப்பித்த ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைத் திட்டத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.93 திட்டத்தைப் புதுப்பித்து புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாக நுழைந்த ஜியோ நிறுவனம் தற்போது ரூ.98 கட்டணத்தில் 28 நாள்களுக்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதனுடன் இலவச அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஜியோவின் இத்திட்டத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ரூ.93 திட்டத்தில் 28 நாள்களுக்கு 1 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனுடன் ஜியோவைப் போலவே இலவச அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகளும் வழங்கப்படுகிறது.

முன்னதாக ஏர்டெலின் ரூ.93 திட்டத்தில் இலவச அழைப்பு, 100 எஸ்.எம்.எஸ். உட்பட 10 நாள்களுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையானது ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனவும் மற்ற மாநிலங்களில் இத்திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவரையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 10 நாள்களுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon