மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரைக் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரைக் குழம்பு!

நாம் தினமும் சாப்பிடும் தக்காளியில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய சத்துகள் உள்ளதால், ‘லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

பட்டாணி, ‘மூட் ஸ்விங்ஸ்’ என்று சொல்லக்கூடிய மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளைப் (Symptoms) போக்கும் தன்மை உண்டு.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் காதலில் அதிகம் ஈடுபடுவார்கள் என்கிறது அறிவியல். எனவே, காய்கறி - கீரைகளுக்கு உணவில் தவறாமல் இடம் கொடுக்கவேண்டியது அவசியம். ‘காமம் விளைவிக்கும் கீரைகள்’ என சித்த மருத்துவம் ஒரு பட்டியலே தந்திருக்கிறது. தாளிக்கீரை, தூதுவளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் கொஞ்சம் பாசிப் பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்டால், ஆண்மை பெருகும்’ என்கிறது சித்த மருத்துவம்.

காதல், காமம், கருத்தரிப்புக்குச் சித்த மருத்துவம் பரிந்துரைப்பது முருங்கைக்காய். முருங்கையின் விதையில் உள்ள ‘பென் ஆயில்’ சத்து காதலுக்கும் காமத்துக்கும் அருமருந்து.

இன்றைய ஸ்பெஷலாக முருங்கைக்கீரைக் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முருங்கைக் கீரை - ஒரு கட்டு

பாசிப்பருப்பு - அரை கப்

முருங்கைக்காய் - 2

உப்பு - ருசிக்கேற்ப

வறுத்து அரைக்க:

மிளகு - ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி

துவரம்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி

பச்சரிசி - ஒரு தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 5 அல்லது 6

தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

தேவையான பொருள்களைத் தயாராக எடுத்து வைக்கவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும். துவரம்பருப்பை சிவக்க வறுக்கவும். பச்சரிசியை பொரியவிடவும். மிளகாயை வறுக்கும்போது, சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். வறுத்த அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும். ஆறியதும் அத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். விரும்பினால், கத்திரிக்காயும் சேர்க்கலாம். குக்கரில் பாசிப்பருப்புடன், சுத்தம் செய்த முருங்கைக்கீரையை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் கீரை பருப்பு கலவையுடன், அரைத்துவைத்திருக்கும் விழுது, வேகவைத்த முருங்கைக்காய் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து ஒரு கொதிவிடவும். கடைசியாக கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து சேர்த்து இறக்கிவிடவும். சுவையான முருங்கைக்கீரை புளியில்லாக் குழம்பு தயார். சூடான சாதத்துடன், கலப்பருப்பு, நெய் சேர்த்து, குழம்பு ஊற்றி சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள கூழ் வடகம் பொருத்தமாக இருக்கும்.

அனைவருக்கும் அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துகள்!

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon