மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

தொடர்ந்து முரண்படும் தமிழக பாஜக தலைவர்கள்!

தொடர்ந்து முரண்படும் தமிழக பாஜக தலைவர்கள்!

பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பான பிரச்னையில் தமிழக பாஜக தலைவர்களிடையே முரண்பட்ட கருத்துகள் எழுந்த நிலையில், மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்தும் முரண்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

கடந்த 2ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதனையடுத்து, வீர வசந்தராயர் மண்டபத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டது. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இதுகுறித்து ஆய்வு செய்தனர். இந்து அமைப்பினரோ கோயிலை விட்டு இந்து அறநிலையத் துறையினர் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 12) காலை மீனாட்சியம்மன் கோயிலை, ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “இந்து ஆலயங்களைச் சந்தைகளாக அதிகாரிகள் மாற்றக் கூடாது. மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் கடைகளை தனியார் நடத்த அனுமதிக்கக் கூடாது. மீனாட்சியம்மன் கோயிலின் உள்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு உரிய கருவிகளோ, வசதிகளோ இல்லை. எனவே கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம், காவல் துறை, அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அரசின் விசாரணையில் பக்தர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை மீனாட்சியம்மன் கோயிலை ஆய்வு செய்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்து அறநிலையத் துறை அறம் இல்லாத துறையாகச் செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். “மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாஜக சார்பாக சிபிஐ விசாரணை கோருவோம்” என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஏற்கனவே பேருந்துக் கட்டண உயர்வு குறித்த பிரச்னையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் எழுந்த நிலையில், தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து விவகாரத்திலும் இருவருக்குமிடையே முரண்பட்ட கருத்துகள் எழுந்துள்ளது.

அரசின் சார்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜனும், அரசு நடத்தும் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon