மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

சிறப்புக் கட்டுரை: மீளாத் துயரில் தள்ளிய பணமதிப்பழிப்பு!

சிறப்புக் கட்டுரை: மீளாத் துயரில் தள்ளிய பணமதிப்பழிப்பு!

கபீர் அகர்வால்

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இந்தியாவின் பல பகுதிகளில் பணத்தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும் பணத்தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 30 சதவிகிதப் பங்கைக்கொண்டுள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணப்புழக்கம் மீண்டும் மெதுவாகத்தான் சீரானது. கிராமப்புறங்களில் நகரங்களைவிட மிகவும் தொய்வாகவே பணப்புழக்கம் இருந்தது.

பணப்புழக்கத்தைச் சீராக்கும் பணிகள் பொதுத் துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில்தான் பணப்புழக்கத்தைச் சீராக்கும் பணிகள் முடிந்தன. இதனால் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களிலுள்ள பலருக்குப் பணப்பற்றாக்குறை மிக மோசமான நிலையில் இருந்தது. 60 சதவிகித பணப்பற்றாக்குறையை இவர்கள் கண்டிருந்தனர். பெரும்பாலான வங்கிகளில் 2 மணிக்குப் பிறகு பணமே இருக்காது” என்றார்.

பணப்பற்றாக்குறை எல்லாவிதமான சந்தைகளையும் கடுமையாகப் பாதித்திருந்தாலும், வேளாண் மொத்த விற்பனைச் சந்தையின் பாதிப்பு என்பது மிகவும் தீவிரமானது. அப்போது ரொக்கப் பணம் கைகளில் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. உருளைக்கிழங்கு வர்த்தகம் ரொக்கப் பணம் இல்லாமல் வர்த்தகத்தையே முடக்கியது.

ஆக்ரா, ஹத்ராஸ் மற்றும் தென்மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மதுரா ஆகிய இடங்களில் உள்ள மூன்று ஒழுங்குமுறை சந்தைகளிலும் பணமதிப்பழிப்பு மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து நடப்பாண்டு ஜனவரி வரையிலும் உருளைக்கிழங்கின் சராசரி விலை பாதியாகச் சரிந்துள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,000க்கு விற்ற உருளைக்கிழங்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கும் கீழாகச் சரிந்தது. நவம்பரில் உருளைக்கிழங்கின் சராசரி விலை ரூ.916ஆக இருந்தது. டிசம்பரில் இதன் விலை 44 சதவிகிதம் சரிந்து 532 ரூபாயாகக் குறைந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு முதல் முழு மாதமான டிசம்பரில் ஏற்பட்ட இந்தச் சரிவானது இன்றுவரை மீண்டுவர இயலாததாக மாறிவிட்டது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தச் சரிவு மேலும் உயர்ந்து உருளைக்கிழங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.399ஆக இருந்தது.

டீமானிட்டிசேசன் புத்தகத்தின் எழுத்தாளரும், பொருளாதாரவியலாளருமான பேராசிரியர் அருண் குமார், பணமதிப்பழிப்பு நடவடிக்கை அந்தச் சமயத்தில் பொருள்களின் உற்பத்தி விலையைக் குறைத்ததில் பெரும் பங்காற்றியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், “வர்த்தகர்கள் மிகக் குறைந்த மூலதனத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மிகக் குறைந்த விலைகளில் உற்பத்திப் பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அமைப்புசாராத் துறையில் பொருள்களின் தேவையும் பெருமளவில் குறைந்தது. வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் பரிவர்த்தனை முறைகளை மாற்ற வேண்டியிருந்ததே அமைப்புசாராத் துறையின் தேவை குறைந்ததற்குக் காரணமாக இருந்தது. தங்களுக்குப் போதுமான அளவில் உணவுப் பொருள்களை வாங்குவதற்குக்கூட இயலாத அளவுக்கு மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவியது. ஜூன் வரையிலும் பணத்தட்டுப்பாடு நீடித்தது. இதன் விளைவால் நீண்ட காலத்துக்கு இதன் பாதிப்பு நிலவியது” என்றார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஒருபக்கம் உருளைக்கிழங்கின் விலை சரிந்தாலும், உத்தரப்பிரதேசம் பிப்ரவரியில் உருளைக்கிழங்கு அறுவடையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்தது. 2016-17 நிதியாண்டில் உத்தரப்பிரதேசம் 155 லட்சம் டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்துள்ளது. “ஏற்கெனவே சந்தையில் கடுமையான விலை வீழ்ச்சி இருந்த நிலையில் உற்பத்தி அதிகரித்தது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உருளைக்கிழங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 வரை விலை சரிந்தது” என்கிறார் சுதிர் பன்வார். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் கிசான் ஜக்ரிதி மன்ச் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் திட்டக்குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

சமூக விஞ்ஞானியும், அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவ் கூறுகையில், “விவசாயிகள் ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். சந்தை நிலைகள் விவசாயிகளுக்கு ஏற்றதாகவே இல்லை. அத்தகைய சூழலில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை விவசாயிகளின் நிலையை மேலும் மோசமாக்கியது. இன்றுவரை விவசாயிகளால் மீண்டுவர இயலாத அளவுக்கு வேளாண் துறையைச் சேதப்படுத்தியது” என்றார். 2014ஆம் ஆண்டிலிருந்து உருளைக்கிழங்கு விலை நிலவரத்தைப் பார்த்தோமானால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலிருந்துதான் உருளைக்கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது. சந்தை விலை நிலவரம் விவசாயிகளுக்கு அப்போது விலை நிலவரங்கள் ஏற்றதாகவே இருந்துள்ளது. 2017ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து இரு ஆண்டுகள் வறட்சி நிலவிய போதிலும் உருளைக்கிழங்கின் விலை இடைப்பட்ட இரண்டாண்டுகளில் குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய்க்குக் கீழான விலைச் சரிவு சில காலம் கூட நீடிக்கவில்லை. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் 500 ரூபாய்க்குக் கீழாக விலைச் சரிவு ஏற்பட்டு வருடங்கள் தாண்டியும் மீண்டுவர இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் உருளைக்கிழங்கின் மாதாந்திர சராசரியை விலை குவிண்டாலுக்கு 958 ரூபாயாக இருந்தது. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 14 மாதங்களாக உருளைக்கிழங்கின் மாதாந்திர தோராய விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.436 ஆக மட்டுமே உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை நீக்கிப் பார்த்தால் உண்மையான விலைகள் இன்னும் மோசமாக இருக்கும். ஒவ்வொரு பருவமும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிகிறது. கடந்த நான்கு பருவங்களைக் கணக்கில் கொண்டால் 2017ஆம் ஆண்டு பருவத்தில்தான் மற்ற பருவங்களுடன் ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சி மிகக் கடுமையாக இருந்தது. 2014ஆம் ஆண்டில் உருளைக்கிழங்கு விலை தோராயமாக குவிண்டால் ஒன்றுக்கு 1,311 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டில் இதன் தோராய விலை 427 ரூபாயாகச் சரிந்துவிட்டது.

ஆனால் 2015ஆம் ஆண்டில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் உருளைக்கிழங்கின் தோராய விலை குவிண்டால் ஒன்றுக்கு 570 ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு 883 ரூபாயாக இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் அதிகபட்ச விலை 478 ரூபாயாக மட்டுமே இருந்தது. 2017ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வடக்குப் பகுதியில் உருளைக்கிழங்கின் விலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு கிராமப் பகுதிகளில் பணப்புழக்கம் சீராகிவிட்டது. இருப்பினும் விலை சீராகவில்லை ஏன்?

அருண்குமார் இதுபற்றி விவரித்துப் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டினால் பொருட்களின் தேவை குறைந்தது. இதனால் உருளைக்கிழங்கு குவியல் குவியலாகத் தேங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு பணப்புழக்கம் சீரானது. ஆனால், அப்போது சந்தையின் தேவையைத் தேங்கியிருந்த உருளைக்கிழங்கு சமன் செய்தது. இதனால் விலை உயரவில்லை” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "வர்த்தகர்களுக்குச் சந்தையில் உருளைக்கிழங்கு இருப்பு இல்லை என்று தெரியவரும்போது மீண்டும் உருளைக்கிழங்குவிலை உயரும். இங்கு வர்த்தகர்கள் தான் விலையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். பணப்புழக்கம் சீரானால் மட்டும் விவசாயிகளுக்குப் போதாது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை தான் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும் மற்ற சில சிக்கல்களும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகளை விவசாயிகள் விற்பதில் இருக்கிறது.

வர்த்தகர்கள் கூட்டாக இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் தான் சந்தையில் விலையை நிர்ணயிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதிலும் சிறு விவசாயிகளுக்கு இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எவ்வளவு உற்பத்தியானது, சந்தைக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்பது குறித்த சரியான திட்டமிடல் எதுவுமே அரசாங்கத்திடம் இல்லை. அப்படியிருந்தால் அது விவசாயிகளுக்கு உதவும். விரைவில் அறுவடைக் காலம் தொடங்கவுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும். ஏற்கனவே உருளைக்கிழங்கு இருப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் இப்போது அறுவடையாகும் உருளைக்கிழங்குக்கு விலை மிகக் குறைவாகவே கிடைக்கும்" என்றார்.

வேளாண் துறை அமைச்சகம் அண்மையில் தோட்டக்கலை மூலம் 2017-18 பருவத்தில் 305 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகும் என்று மதிப்பிட்டுள்ளது. தொடர்ந்து உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாகத் தோட்டக்கலை மூலம் உருளை உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon