மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

பார்க்காத பக்தர்களுக்கு வார்த்த திருமேனி!

 பார்க்காத பக்தர்களுக்கு வார்த்த  திருமேனி!

’’இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்போது, மோட்சம் உறுதி என்று தெரிந்துவிட்ட நிலையில்... கழியும் ஒவ்வொரு ஆண்டும் நமக்குப் பேறுதான்’’ என்கிறார் ராமானுஜர்.

பரந்து விரிந்த பாரத தேசமெல்லாம் கால்களால் அளந்து திரிந்த வைணவப் பறவையான ராமானுஜர், தன் தத்துவச் சிறகுகளின் மூலம் வைணவத்துக்கு புதிய வானங்களைத் திறந்து வைத்தவர். மீச்சிறு கிராமம் ஆனாலும், மீப்பெரு நகரம் ஆனாலும் தனது விசிஷ்டாத்வைத தத்துவத்தை நட்டு, வளர்த்து, கிளைத்து, தழைத்து, பரப்பி, அசைக்க முடியாத ஆல விருட்சமாய் நிலைபெறச் செய்வதவர் ராமானுஜர்.

அவரது பயணங்கள் எல்லாமே பாமரர்களை பண்டிதர்கள் ஆக்கின. பண்டிதச் செருக்கு கொண்டோரை பக்குவப்படுத்தின. வைணவம் மக்களுக்கானதே, மக்கள் திரளுக்கானதே, மானுட சமுத்திரத்துக்கானதே என்ற விரிவை தனது பயணங்களின் மூலம் பொழிந்தார் ராமானுஜர்.

இப்படி அனைத்து திசைகளிலும் உதித்த அந்த வைணவச் சூரியன் இப்போது பழுத்த பழமாய் திருவரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் தானுகந்த திருமேனியை நாம் நினைவு கூர வேண்டும். தமருகந்த மேனி என்று மேல்கோட்டையில் ராமானுஜருக்கு அவரது அடியார்களால் எழுப்பப்பட்ட சிலை பற்றிப் பார்த்தோம். அடுத்து ராமானுஜரின் அவதாரத் தலமான திருபெரும்புதூரில் இப்போதும் இருக்கும் தானுகந்த மேனியைப் பற்றி இப்போது பார்ப்போம். ஏற்கனவே நாம் தானுகந்த மேனிக்காக ராமானுஜரின் சீடர்கள் அவரிடம் வற்புறுத்தியது பற்றிப் பார்த்திருந்தோம்.

இப்போது நாம் தானுகந்த மேனிக்கான தறுவாயில் நிற்கிறோம். தானுகந்த மேனி உருவான தருணம் எது?

எம்பெருமானார் ராமானுஜர் தனது மேலான செயல்பாடுகளால் நாடு முழுதும் நன்கு அறியப்பட்டவராகி மன்னர்கள் முதல் மக்கள் வரை அவர் மீது அபார அன்பு செலுத்தி வந்த தருணம் அது. புகழ் என்ற ஒரு சிறு வார்த்தையால் அந்த அந்தஸ்தினை நாம் சுருக்கிவிட முடியாது. ராமானுஜருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருந்தார்கள்... ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்தார்கள். ராமானுஜரே நியமித்த 74 சிம்மாசனாதிபதிகள் இருந்தார்கள். அவர்கள்தான் பின்னாட்களில் ஜீயர்கள் என்று அழைக்கப்பெறுகிறார்கள்.

இப்படி பெரும் புகழின் உச்சியில் இருந்த ராமானுஜர் திருவரங்கத்தில் அமைதியாக வீற்றிருந்தார். வயது நூறைத் தாண்டி நூற்றுப் பத்தினைத் தாண்டி நூற்று பத்தொன்பது வயதாகிவிட்டது. வைணவப் பழமாய் அமர்ந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு திருபெரும்புதூரில் சிலைவைக்க வேண்டும் என்று சிஷ்யர்கள் விரும்பி வலியுறுத்தி முதலியாண்டான், கந்தாடை ஆண்டான் ஆகியோர் மூலமாக இதற்கு ராமானுஜரின் ஒப்பத்தையும் பெற்றுவிட்டனர்.

அதற்கான சிலை தயாரிக்கும் பணியும் நடைபெற்றது. அப்போதைய ராமானுஜரின் திருமேனி, காதுகள், கண்கள், தலை, மார்பு, கைகள் என்று அந்த வயதுக்கே உரிய தோற்றத்தை அப்படியே செப்புத் திருமேனியாக தத்ரூபமாய் வடித்தனர். அதை திருவரங்கம் எடுத்து வந்து ராமானுஜரிடம் காட்டினார்கள்.

தானே தன்னைப் பார்க்கும் வித்தையை பல தத்துவங்கள் மூலம் பலருக்கும் உரைத்த ராமானுஜர், அன்று தானே தன்னைப் பார்த்தார் இந்த சிலை மூலமாக. கையிலேந்தில தண்டம், அரங்கனைக் கூப்பிய கைகள் என்று ராமானுஜரை அப்படியே கண் முன் நிறுத்துகிறது இந்த சிலை. எம்பெருமானாரான ராமானுஜர் தனது இந்தச் சிலையை தானே ஆரத் தழுவி தனது அன்பை சிஷ்யர்களுக்குத் தெரிவித்தார். அந்த சிலைதான் தானுகந்த திருமேனி என்று அழைக்கப்பட்டது.

இந்த திருமேனி நள வருடம் ( 1136-ம் ஆம் வருடம்) தைப்பூச நன்னாளில் திருபெரும்தூரில் கந்தாடையாண்டான் நிறுவப்பட்டது. அந்த சிலையைதான் அந்தத் திருமேனியைதான் ராமானுஜர் தானே தழுவிக் கொடுத்த அந்த திருமேனியைதான் இன்றும் திருபெரும்தூரில் நாம் காணமுடிகிறது.

அந்தத் திருமேனியை கொஞ்ச நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமானுஜரைப் பார்ப்பது போலவே ஒரு உணர்வு ஏற்படும். எம்பெருமானாரை நேரில் பார்க்க முடியாதவர்களுக்கெல்லாம், வார்க்கப்பட்ட இந்தத் திருமேனி மூலம் பார்க்கும் ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இந்தத் திருமேனி திருபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்றே, எம்பெருமானாரின் திருமேனியில் தளர்ச்சி உண்டாகிவிட்டது.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரான ஜெகத்ரட்சகன் தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக தமிழுக்கும் வைணவத்துக்கும் தொண்டாற்றி வருகிறார். அவரது மையம் மூலமாக பாசுரங்கள் பல பேர் மனதை மையம் கொண்டுள்ளது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon