மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

அவை மரபை மீறினார் சபாநாயகர்!

அவை மரபை மீறினார்  சபாநாயகர்!

அவை மரபை மீறி ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 12) ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் உருவப்படத்தை திறந்து வைத்த, இவ்விழாவினை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

ஜெயலலிதா படத்திறப்பு விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் சார்பாக திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் இன்று முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் அவசர வழக்காக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழக்கு நாளை விசாரணைக்கும் வரவுள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டவர் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதா இருந்திருந்தால் சசிகலாவோடு பெங்களூரு சிறையில்தான் இருந்திருப்பார். எனவே ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஜெ.அன்பழகன் மூலம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது. இன்று அந்த வழக்கின் மீதான விசாரணை வரவிருந்த நிலையில், எதிர்மறையான தீர்ப்பு வந்துவிடுமோ என்று அஞ்சிய ஆட்சியாளர்கள் அவசர அவசரமாகப் படத்தைத் திறந்துவைத்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.

"சபாநாயகர் என்பவர் அவையின் மாண்பைக் காப்பாற்றக்கூடியவர். ஆனால் சட்டவிரோதமாக அதிகாரிகளின் துணையுடன் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட நான் சட்டமன்றத்தில் குட்காவை எடுத்துச் சென்று காண்பித்தேன், அதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் அது அவைக்கு விரோதமான நடவடிக்கை என்று கூறி சபாநாயகர் எங்களை வெளியேற்றினார். ஆனால் தற்போது படத்தை திறந்து வைத்ததன் மூலம் சபாநாயகரே அவை மரபை மீறியிருக்கிறார்" என்றும் விமர்சனம் செய்தார்.

படத் திறப்பை திமுகதான் அரசியலாக்குகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "நாங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்துள்ளன. அப்போது இவர்களெல்லாம் அரசியல் செய்கிறார்களா?. படத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி, ஜனாதிபதி, கவர்னர் உள்ளிட்டோரை அணுகியுள்ளனர். குற்றவாளி என்று தீர்ப்பளித்த ஒருவரது படத்திறப்புக்கு நாங்கள் வர மாட்டோம் என்று அவர்கள் கூறியதால்தான் அவசரஅவசரமாக சபாநாயகரை வைத்துத் திறந்துவைத்துள்ளனர். நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதா படத்தை வைப்போம் என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஏன் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ படத்திறப்புக்கு வரவில்லை என்பதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

மேலும் போக்குவரத்து நிர்வாகத்தை சீர்ப்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு என்னிடம் நேற்று அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரைக் கொடுக்கப்படவில்லை. நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படிக் கொடுக்கவில்லை என்றால் பிரதான எதிர்க்கட்சியையே இவர்கள் மதிக்கவில்லை என்றுதான் பொருள் என்றும் ஸ்டாலின் கூறினார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon