மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தாதீர்கள்!

தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தாதீர்கள்!

தொழில்நுட்பத்தை அழிவுப்பாதைக்கு உபயோகிக்காமல் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துங்கள் என துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான், பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 11) ஐக்கிய அமீரகம் சென்றார். துபாயில் நடந்த ஆறாவது உலக அரசாங்க மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அதில் தொடக்க நிகழ்ச்சியாகப் பரதநாட்டியம் அரங்கேறியது.

இதையடுத்து, தொடக்கவுரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், “எனக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்பது, 125 கோடி இந்திய மக்களுக்குத் தரப்பட்ட கவுரவம். உலகில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டும், வறுமையும், ஊட்டச்சத்து குறைவும் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதேவேளையில், மற்றொருபுறம் நாம் பெரும்பகுதி பணத்தையும், நேரத்தையும் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

உலக மக்கள்தொகையில் 9.5 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். அபரிமிதமான மக்கள்தொகை பெருக்கத்துக்கு இடையில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி, வீட்டுவசதி போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் துபாயின் வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்தார். வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது எனக் கூறிய அவர், மனிதனின் சிந்தனை வேகத்தை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.

“தொழில்நுட்பத்தின் உதவியால் பாலைவனமாக இருந்த துபாய் இன்று அற்புதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வளைகுடா அமீரகம் இந்த உலகத்துக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. ஆனால், சிலர் தற்கால சைபர் தொழில்நுட்பத்தை மதம்சார்ந்த குரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை அழிவுப்பாதைக்கு உபயோகிக்காமல் ஆக்கபூர்வமான முன்னேற்றத்துக்கு நாம் பயன்படுத்த வேண்டும்”என்றும் அவர் வலியுறுத்தினார். reduce, reuse, recycle, recover, redesign and remanufacture ஆகிய ஆறு Rகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று கூறிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக இந்தியா வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

உலகில் உள்ள மற்ற நாடுகளைவிட, குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளதாகவும், தொழில்நுட்ப மேம்பாட்டில், சூரிய சக்தி மிகப்பெரியதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக, அபுதாபியில் கட்டப்படவுள்ள முதல் இந்துக்கோயிலான ஸ்ரீ அக்ஷார் புருசோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா ஆலயத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது, “வளைகுடா நாடுகள் இந்தியர்களின் இரண்டாவது தாயகமாக உள்ளது. இங்கு இந்து கோயிலைக் கட்ட அனுமதித்த பட்டத்து இளவரசருக்கு 125 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கோயில் கட்டடக்கலை மற்றும் வசீகரம் ஆகியவற்றுக்கான தனித்துவம் மிக்க ஒன்றாக மட்டுமின்றி, உலகம் ஒன்றுதான் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்” என்று பேசினார்.

அந்தக் கோயில் 2020ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon