மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஊழல்: தெற்கு ரயில்வேக்கு எந்த இடம்?

ஊழல்: தெற்கு ரயில்வேக்கு எந்த இடம்?

லஞ்சம், ஊழல் விவகாரங்களில் தெற்கு ரயில்வே இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகக் கடந்த சில ஆண்டுகளாகப் புகார்கள் வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 18,644 ரயில்வே ஊழியர்கள் லஞ்சம் வாங்கியிருப்பதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கொடுப்பவர்கள், சரக்கு பெட்டகம் முன்பதிவு செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் விவகாரத்தில் வடக்கு மண்டல ரயில்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6,121 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேக்கு லஞ்சம், ஊழல் விவகாரங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 1955 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகப்படியான ஊழியர்கள், தங்களது பணியின் கடைசிக் காலத்தில் இருக்கும்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மத்தியப் புலனாய்வு ஆணையம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2016ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 11,200 பேர் மீது புகார் வந்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது ரயில்வே ஊழியர்கள் சட்டம் 1968இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon