மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்தது குறித்து, முழு விசாரணையை நடத்தாமல் எங்களைக் குற்றம் சாட்டாதீர்கள் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இரு தினங்களுக்கு முன்பு சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் முகாம் மீது இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலினால் ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர்.

“தொலைபேசி உரையாடல்கள் இடைமறிப்பு செய்யப்பட்டபோது பயங்கரவாதத் தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது” என மாநில போலீஸ் கமிஷனர் எஸ்.பி. வாய்த் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு இதனை வழக்கம்போல் மறுத்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது மற்றும் எந்த ஒரு விவகாரத்திலும் முழுமையான விசாரணை என்பது முன்னெடுக்கப்படாமலே பாகிஸ்தானைச் சாடுவது என்பது இந்திய அதிகாரிகளின் வழக்கமான முறையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடக்கும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதிலிருந்தும் கவனத்தைத் திசைதிருப்பவே, எங்களுக்கு எதிராக இந்தியா குற்றம் சாட்டிவருகிறது எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் நடக்கும் மனித உரிமைகள் மீறலையும், எல்லையில் நடக்கும் தாக்குதல்களையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனச் சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை நேற்று (பிப்ரவரி 11) வெளியிட்ட தகவலில் “விசாரணைக்கு முன்னதாகவே இந்திய ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்கள்” எனக் குற்றம் சாட்டியிருந்தது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon