மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ரஹ்மானுக்குப் பதிலாக ராஜா?

ரஹ்மானுக்குப் பதிலாக ராஜா?

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் சைரா நரசிம்ஹா ரெட்டி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக இளையராஜா இசையமைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சி செய்து உயிர் நீத்தவர் ஆந்திரப் பிரதேசத்துப் புரட்சியாளர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. இவரது போராட்டத்தையும், பிறகு ஆங்கிலேயரால் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தையும் சுற்றி இத்திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் இசையமைப்பதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். ஆனால் படக் குழுவினருடன் என்ன பிரச்சினையோ, கால்ஷீட் பிரச்சினையால் இந்தப் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார் ரஹ்மான்.

இதனையடுத்து இந்தப் படத்திற்கு யார் இசையமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த லிஸ்டில் தமன், ஹிப்ஹாப் ஆதி, பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரின் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவுள்ளது.

இளையராஜாவுக்குப் பத்ம விபூஷண் விருது வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானபோது சிரஞ்சீவி அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த உரையாடலின்போது தனது 151ஆவது படமான சைரா நரசிம்ஹா ரெட்டி படத்திற்கும் இசையமைக்கக் கேட்டுக்கொண்டதாக டோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி நடிப்பில் சரித்திரப் படமாக உருவாகிவரும் இதில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘கொனிடேலா புரொடக்‌ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாகத் தயாரித்துவருகிறார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon