மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

கட்டுமானத் திட்டத்துக்கு நிதி குறைப்பு!

கட்டுமானத் திட்டத்துக்கு நிதி குறைப்பு!

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சாகர்மாலா திட்டத்துக்குக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கப்பல் துறைக்கு ரூ.1,881.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 6 சதவிகிதம் கூடுதலாகும். கடந்த நிதியாண்டில் (2016-17) கப்பல் துறைக்கு ரூ.1,773 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசின் முக்கிய திட்டமான சாகர்மாலா திட்டத்துக்குக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.480 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.600 கோடியாக இருந்தது.

மத்திய அரசின் மிகப்பெரிய திட்டமாகப் பேசப்பட்டு வந்த சாகர்மாலா திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிய துறைமுகங்களை உருவாக்கவும், துறைமுகங்களுக்கு இணைப்பு வசதிகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான் சாகர்மாலா திட்டம். இத்திட்டம் தனியார் முதலீடுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆனால் கப்பல் துறையின் எல்லாப் பிரிவுகளுக்கும் தனியார் முதலீடு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை.

ஷிப்பிங் கார்ப்பரேசனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சப்யாசசி ஹஜாரா டி.என்.ஏ. இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கப்பல் துறைக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சாகர்மாலா திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் எல்லா நிகழ்வுகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon