மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ராணுவ முகாமில் தாக்குதல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

ராணுவ முகாமில் தாக்குதல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன்பு சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் நடைபெற்ற தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

சிஆர்பிஎஃப் முகாமில் ஒரு வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் கரண் நகர்ப் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாம் அமைந்துள்ளது. சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் இன்று முயற்சி செய்துள்ளனர். இன்று (பிப்ரவரி 12) அதிகாலை ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், முகாம் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

விழிப்புடன் இருந்த வீரர்கள் நடத்திய பதிலடியால் தீவிரவாதிகள் தப்பியோடிப் பதுங்கினர். இதன் மூலம் தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பதுங்கியுள்ள தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தத் தேடுதல் பணியின்போது தீவிரவாதிகள் சுட்டதில் பலத்த காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, சிஆர்பிஎஃப் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

சஞ்சுவான் முகாம்: 9 பேர் பலி

சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் கடந்த சனிக்கிழமை அதிகாலை புகுந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவக் குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் முகாமுக்குள் சோதனை நடத்தப்பட்டபோது மேலும் 3 ராணுவ வீரர்கள் இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் ராணுவ முகாம் தாக்குதலில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து, முகாமில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்த வீரர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்தினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்பகுதியில் நேற்று (பிப்ரவரி 11) இரவுக்குப் பின் துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரச் செயல் புரிந்த மதன்லால்

இந்தத் தாக்குதலில் 50 வயதான ராணுவ வீரர் மதன்லால் என்பவர் தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது, கையில் இருந்த ஏகே 47 ரகத் துப்பாக்கியைக் கீழே தவறவிட்டுவிட்டார். தீவிரவாதிகள் சுட்டதில் அவர் உடல் முழுவதும் குண்டு காயங்கள் ஏற்பட்டபோதிலும் தீவிரவாதிகள் அதிக சேதத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, வீரத்துடன் எதிர்த்துச் சண்டையிட்டு, தனது குடும்பத்தைக் காப்பாற்றி, அவர் இறந்துவிட்டார். மதன்லாலின் இந்த வீரச் செயலுக்கு ராணுவ உயரதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon