மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

நோ ஹெல்மெட்; நோ பூஜா!

நோ ஹெல்மெட்; நோ பூஜா!

ஓடிசாவில் ஹெல்மெட் இல்லையென்றால் இருசக்கர வாகனத்துக்குப் பூஜை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்கந்த் பகுதியில் 1000 ஆண்டுகள் பழைமையான மா சரளா கோயில் அமைந்துள்ளது. புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்தக் கோயிலில் பூஜை போடுவது வழக்கம்.

இந்த நிலையில், ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு இனி பூஜை செய்யப்பட மாட்டாது எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் இடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகத்சிங்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ், “விபத்துகளில் சிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் இல்லாததாலேயே உயிர் இழக்கின்றனர். எனவே, சாலை விபத்துகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி இந்த மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன் பயனாக 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 14% குறைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து விளக்கினோம். கோயில் நிர்வாகத்தினர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற கோயில் நிர்வாகத்தினரும் இதைப் பின்பற்றி விபத்துகளைக் கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மே மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் விதிமுறை இல்லையென்றால், எரிபொருள் இல்லை என்னும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஹெல்மெட் அணியாதவர்களுக்குப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது.

அதேபோல், கொல்கத்தாவில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சேஃப் டிரைவ், சேவ் லைஃப் என்னும் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon