மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

அவசரமாகத் திறக்க வேண்டிய அவசியம் என்ன?

அவசரமாகத் திறக்க வேண்டிய அவசியம் என்ன?

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை அவசர கதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஆர்கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்றத்தில் அமைக்கப்படுமென்று கடந்த வாரம் அறிவித்தது தமிழக அரசு. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டவரின் படத்தைச் சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன எதிர்க்கட்சிகள். எனினும், இன்று காலையில் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் ஜெயலலலிதா படம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிமன்றத்திற்குச் சென்று ஜெயலலிதா படத்திறப்பு குறித்து தடை வாங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் படத்திறப்பு விழாவை நடத்தி முடித்திருப்பதாக திமுக தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களை சந்தித்த ஆர்கே.நகர் எம்.எல்.ஏ தினகரன், "அம்மா படத்தை அவசர கதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தெரியவில்லை. அம்மாவின் பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி வருகிறது. அன்று தேசியத் தலைவர்களை எல்லாம் அழைத்துப் படத் திறப்பு செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தினகரன், "ரிப்பன் மாளிகையில் முன்னாள் மேயர்களின் படத்தைத் திறப்பது போல மிகச் சாதாரணமாக இந்நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். அவசர கதியில் படத்திறப்பை நடத்துவதற்கு என்ன காரணமென்றால், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்தது தவறு என்று தீர்ப்பு வந்துவிடும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்கிறார்கள். அப்படித் தீர்ப்பு வரும் பட்சத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் இப்படிச் செய்கிறார்கள். மாபெரும் தலைவரின் படத்திறப்பு விழாவைக் கட்சி கவுன்சிலர் படத்திறப்பு விழாபோலச் செய்தது கண்டிக்கதக்கது" என்று குற்றம்சாட்டினார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon