மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

நேரடி மானியத் திட்டத்தால் சேமிப்பு!

நேரடி மானியத் திட்டத்தால் சேமிப்பு!

இந்திய அரசின் 400க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான மானியங்களைப் பயனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்துவதால் இந்திய அரசு ரூ.56,000 கோடி மிச்சப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிப்ரவரி 11ஆம் தேதி துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் ”பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் முக்கிய காரணமாகும். அதனால் தான் இந்தியாவில் ஜிஎஸ்டி சாத்தியமானது. அரசின் மின்னணு சந்தையின் மூலம் குறுகிய காலத்தில் ரூ.4,500 கோடி லாபத்தை இந்தியா பெற்றுள்ளது. மின்னணு சந்தையின் மூலம் தேவையான பொருட்களையோ, சேவைகளையோ பயனர்கள் எளிதாக வாங்க முடியும். மேலும் சிறு வணிகர்கள் அவர்களின் தயாரிப்புகளை எளிமையான தொழில்நுட்ப உதவியுடன் சந்தைப்படுத்த முடியும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா ஒரு புரட்சி செய்துள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்களை வரவேற்று அதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 35 வயதிற்குட்பட்டவர்கள் 65 சதவிகிதம் அளவுக்கு உள்ளனர். புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும்” என்று பேசினார்.

விவசாயிகள் குறித்துப் பேசிய மோடி, ”2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டை, மின்னணு வேளாண் சந்தை போன்ற திட்டங்கள் அதற்கு உதாரணங்களாகும். அதன் மூலம் 36,000 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன” என்றார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon