மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

அமலா பால் புகார்: தொடரும் விசாரணை!

அமலா பால் புகார்: தொடரும் விசாரணை!

பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த ரசாக் என்பவர் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மலேசியாவில் கடந்த 3ஆம் தேதி நடைபெறவிருந்த ‘Dazzling Tamizhachi’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அமலா பால் அதற்காகக் கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடனப் பள்ளி ஒன்றில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகேசன் என்ற நபர் அமலா பாலை மலேசியாவில் தொழிலதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அமலா பால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமலா பாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசனைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மலேசிய நிகழ்ச்சிக்குப் பின் அங்குள்ள தொழிலதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டிக்கு அமலா பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்திக்கொள்ள பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தன்னை அனுப்பியதாகவும் தெரிவித்தார். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பாஸ்கரும் அழகேசனும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், அமலா பாலை பிரைவேட் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்த விவகாரத்தில், மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தனியார் நிறுவனத்தின் சென்னை மேலாளரான ரசாக்குக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. ரசாக்கைக் கைது செய்ய போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ரசாக் இன்று (பிப்ரவரி 12) மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திரைத் துறையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon